லண்டன், டிசம்பர் 7 – ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக இங்கிலாந்து எச்சரித்துள்ளது. விடுதலை புலிகளுக்கு இடையேயான இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை சிங்கள அரசு கொன்று குவித்து அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது.
இலங்கை மீது சுதந்திரமான ஞாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நல்லிலக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு அரசியல் தீர்வும் காணவேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த மாதம் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இலங்கையை வலியுறுத்தினார்.
வரும் மார்ச் மாதத்திற்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்தார். இத்தகைய சூழலில் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து வாக்களிக்க திட்டமிட்டுள்ளது.
இலங்கை விவகாரம் குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு, காமன்வெல்த் மற்றும் சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து விவாதிக்கப்படும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கொஹோசிவைத் தெரிவித்துள்ளார். இதனால் ராஜபக்சே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.