பிரிட்டோரியா, டிசம்பர் 7- தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும் கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டேலா ஜோகனஸ்பர்கில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. இதற்காக அவரது உடல் ராணுவ மரியாதையுடன், தேசியக் கோடி போர்த்தப்பட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது இறுதிச்சடங்கு மற்றும் உடல் நல்லடக்கம் தொடர்பாக தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா கூறியதாவது, “நெல்சன் மண்டேலாவின் உடல் வரும் 15-ம் தேதி கிழக்கு கேப் மாகாணத்தில், அவரது சொந்த ஊரான கினு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்படும். பின்னர் அங்கேயே உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
அவரது மறைவுக்கு ஒருவாரம் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 8-ம் தேதி தென் ஆப்பிரிக்க மக்களுக்கு தேசிய பிரார்த்தனை நாள் ஆகும். 10-ம் தேதி ஜோகனஸ்பர்க் கால்பந்து மைதானத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்க முடியும்.
11-ம் தேதி முதல் உடல் அடக்கம் செய்யும் வரையில் பிரிட்டோரியாவில் உள்ள அரசு கட்டிடங்களில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறினார்.