சிங்கப்பூர், டிச 10 – கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற கலவரம் மிகக் கடுமையான சம்பவம் என்று அந்நாட்டில் துணைப்பிரதமர் தியோ சீ ஹியேன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவத்திற்குக் காரணமான அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சம்பவத்தின் மாண்டவர் யார்?
இக்கலவரம் நடைபெறுவதற்குக் காரணமான அந்த பேருந்து விபத்தில் மாண்டவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேலு (வயது 33) என்ற விபரம் தெரியவந்துள்ளது. ஹொங் ஹப் சூன் கட்டுமான நிறுவனத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர், சம்பவம் நடந்த அன்று சாலையைக் கடக்கும் போது தனியார் பேருந்து ஒன்று மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய 400 க்கும் அதிகமான அந்நியத் தொழிலாளர்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரைத் தாக்கியதோடு, பேருந்தையும் அடித்து நொறுக்கினர். சம்பவம் நடந்த இடத்திற்கு முதலுதவிக்காக வந்த அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) யையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தினர்.
நிலமையைக் கட்டுப்படுத்த வந்த காவல்துறை வாகனங்களையும் அடித்து நொறுக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையினரையும் காயப்படுத்தினர்.