Home நாடு இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்!

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்!

1405
0
SHARE
Ad

543847_503818422992270_33271632_n

கோலாலம்பூர், டிசம்பர் 11 – 1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி, “சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் ” என தம் தாய்மொழியாம் தமிழின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். பன்மொழிப் புலமை பெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என கவிபுனைந்த கவிஞாயிறு.

#TamilSchoolmychoice

சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர்.

பாட்டுக்கொரு புலவன் பாரதி. இவர் பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவர். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர்.

மகாகவி பாரதி தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…. என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் இந்த முண்டாசுக் கவிஞர். எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டுமக்களிடையே எடுத்து சொல்லி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியவர்  பாரதியார்.

‘பாட்டுக்கொரு புலவன்’ என்று கவிமணி போற்றிய பாரதி நாட்டுக்கொரு புலவனாக விளங்கியவன்.  உலகம் போற்றும் ஒப்பற்ற கவிஞரான பாரதியின் 131 வது பிறந்தநாள் 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் 11–12–13 நாளான இன்று கொண்டாடப்படுகிறது.