சென்னை, டிசம்பர் 11 – மகாகவி பாரதியாரின் 132 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…. என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் அந்த முண்டாசுக் கவிஞர்.
எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டுமக்களிடையே சொன்னவர் பாரதியார். அந்த மகாகவி பிறந்த தினம் டிசம்பர் 11.
தமிழ்நாட்டில் பிறந்தாலும் இந்தியா முழுவதற்கும் உரிமையான கவிஞன்தான் பாரதியார். அவரது 133 வது பிறந்த நாளை தமிழக அரசு இன்று கொண்டாடியது.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியின் திரு உருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அவர்களுடன் சென்னை மாநகர மேயர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை செயலாளர் உட்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பத்திரிக்கையாளர்கள் தினம் மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் கொண்டாடியது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் அவர் வசித்த பகுதியில் ஒரு மணிமண்டபம் கட்டவேண்டுமென்றும் பாரதியாரின் பிறந்த தினத்தை பத்திரிகையாளர்களின் தினமாகக் கொண்டாடவேண்டும் எனவும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.