கோலாலம்பூர், டிசம்பர் 11 – ஒட்டுமொத்த மலேசியக் கலையுலகமும் ஒரு அரங்கில் கூடியிருக்க, பலத்த ஆரவாரங்களுடனும், கர கோஷங்களுடன், நாடறிந்த செய்தியாளர் எஸ்.பி. சரவணின், “ஒரு நிருபரின் டைரி 2” நூல் நேற்று மியூசியம் நெகாராவிலுள்ள அரங்கத்தில் அறிமுகம் கண்டது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட, “ஒரு நிருபரின் டைரி 1”-க்கு கிடைத்த வரவேற்பையும் முறியடிக்கும் வகையில், நேற்று மலேசியாவின் முன்னணி நட்சத்திரங்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், எழுத்தாளர்களும், அரசியல் தலைவர்களும் பங்கேற்க வெகு விமர்சையாக வெளியிடப்பட்டது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் இன்னொரு முக்கிய அங்கமாக, எஸ்பி சரவணன் அடுத்த ஆண்டு முதல் வெளியிடவிருக்கும் ‘மலேசியக் கலையுலகம்’ என்ற புதிய வார இதழின் சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று நாட்டிலுள்ள அத்தனை மலேசியக் கலைஞர்களுக்கும், ஊடகங்களுக்கும் இடையே ஓர் இணை பிரியாத நட்பும், உறவும் உருவாகியிருக்கிறது என்றால், அதற்கு பின்னணியில் காரணகர்த்தாவாக இருப்பவர் எஸ்பி சரவணன் என்ற மனிதர் தான் என்று கை காட்டுகிறது மலேசியக் கலையுலகம்.
காரணம், சில ஆண்டுகளுக்கு முன், பேஸ்புக், டிவிட்டர் போன்ற நட்பு ஊடகங்கள் அவ்வளவாக பிரபலமடையாமல் இருந்த காலத்தில், எத்தனையோ மலேசியக் கலைஞர்கள் தங்களுக்குள் இருந்த அபார திறமைகளை வெளிப்படுத்தவோ, தாங்கள் வெளிப்படுத்திய திறமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவோ பாலமாக ஒரு ஊடகம் இல்லாமல் தவித்த நேரத்தில், ஒவ்வொரு மலேசியக் கலைஞர்களையும் தேடிச் சென்று அவர்களின் திறமைகள் குறித்து நாளிதழ்களில் எழுதி அவர்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சரவணன்.
நாட்டிலுள்ள அத்தனை பத்திரிகைகளிலும் பணிபுரிந்து, மலேசியக் கலையுலகத்தின் வளர்ச்சிக்கு தன் எழுத்துக்களின் மூலமாக புதிய விடியலை ஏற்படுத்திய பின், தற்போது முழுக்க முழுக்க மலேசியக் கலைஞர்களின் செய்திகள் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் “மலேசியக் கலையுலகம்” என்ற புதிய வார இதழை தொடங்கவிருக்கிறார்.
அதே வேளையில், கலையுலக செய்தியாளராக தனது இத்தனை வருட அனுபவத்தில் தான் சந்தித்த கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரிடையே நடந்த சுவையான சம்பவங்களையும், உரையாடல்களையும் தொகுத்து, “ஒரு நிருபரின் டைரி 1”, “ஒரு நிருபரின் டைரி 2” என இரு புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.
“காசுக்காக செய்தி எழுத மாட்டேன்”
இந்த விழாவில் பேசிய எஸ்பி சரவணன், ஒரு விளையாட்டு செய்தியாளராக இருந்த தான் எப்படி கலையுலக செய்தியாளராக உருவானேன் என்பது குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, தான் செய்தி எழுதிய முதல் மலேசியக் கலைஞர் நடிகை ஜாஸ்மின் மைக்கேல் என்றும், அன்றைய காலத்தில் மலேசியக் கலையுலகில் அவர் ஒருவரை மட்டும் தான் பிரபலமாக இருந்தார் என்று குறிப்பிட்டார். அதன் பின்னர் டிஎச்ஆர் அறிவிப்பாளர் மாறனின் உதவியோடு வாரம் ஒரு கலைஞர் அறிமுகம் என தனது கலைப்பயணத்தைத் தொடங்கியதாக சரவணன் தெரிவித்தார்.
மேலும் சரவணன் பேசுகையில்,
“நான் உள்ளதை உள்ளபடி செய்தியாக எழுதத் தொடங்கிய போது கலைஞர்களுக்கு என்னைக் கண்டால் பிடிக்காது. என்னைப் பார்த்து பயப்படுவார்கள். ஆனால் நான் அவர்களுக்கு நல்லது தான் செய்கிறேன் என்பதை பின்னாளில் தான் உணர ஆரம்பித்தார்கள். ஒரு கலை வளர வேண்டும் என்றால் அங்கு நியாயமான விமர்சனம் தேவை. ஒரு படம் நன்றாக இல்லை என்றால் அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினால் தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிந்து அடுத்த முறை படம் எடுக்கும் போது தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள். அதை தான் நானும் செய்தேன்.”
“எனக்கு வாழ்வில் எத்தனையோ கடினமான சூழ்நிலைகள் வந்தபோது கூட, காசு கொடுங்கள் உங்களைப் பற்றி செய்தி எழுதுகிறேன் என்று யாரிடமும் போய் கேட்டது கிடையாது. “காசு கொடுத்தால் என்னைப் பற்றி எழுதுவீர்களா?” என்று என்னிடமே சிலர் வந்து கேட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த தவறை நான் ஒரு போதும் செய்தது கிடையாது. காரணம் மலேசியக் கலைத்துறையை நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த கலைத்துறையில் எத்தனையோ கலைஞர்கள் அபாரமான திறமையுடன் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரையும் இந்த உலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்று தான் நினைத்தேனே தவிர காசுக்காக அந்த பணியை நான் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.
நிருபரின் டைரி 2-ல் இடம் பெற்றவர்கள் யார்?
ஒரு கலைஞருடனான முதல் சந்திப்பு தொடங்கி, அவரின் தனித்திறமைகளைக் கண்டு தான் வியந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து தனது நிருபரின் டைரி-ல் எழுதி வருவதால், நிருபரின் டைரி 2-ல் 20 பேரைப் பற்றிய சம்பவங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
இது குறித்து விளக்கமளித்த சரவணன், “எல்லோரையும் பற்றி எழுத ஆரம்பித்தால், அதை எழுதி முடிப்பதற்குள் நான் இருக்க மாட்டேன். அதை படிப்பதற்கு நீங்கள் இருக்க மாட்டீர்கள். அவ்வளவு பேர் இருக்கிறார்கள். எனவே என்னை மிகவும் கவர்ந்த அல்லது பாதித்த சம்பவங்களை வைத்து மட்டுமே இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன். நிச்சயமாக தொடர்ந்து நிறைய கலைஞர்கள் பற்றி அடுத்து வரும் எனது படைப்புகளில் எழுதுவேன்” என்று தெரிவித்தார்.
ஒரு நிருபரின் டைரி 2-ல், விஜெ எமர்ஜென்சி, நடிகர் கேகே கானா, விழுதுகள் புகழ் அறிவிப்பாளர் வினோத், பாடகி திலா லஷ்மண், நடிகை, அறிவிப்பாளர் ஷாமினி, பாடகர் எம்எஸ் பிரீட்டோ, நடிகர் மகேன், பாடகர் மணி வில்லன்ஸ், ஆசிரியை மற்றும் அறிவிப்பாளர் தமிழ்வாணி கருணாநிதி, நடிகர் சி.குமரேசன், மலேசிய தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகன் கலைக்குமார், பாடகர் சரேஷ் டி 7, மின்னல் எப்எம் அறிவிப்பாளர் லோகேஸ்வரி கணேசன், மூத்த கலைஞர் கே.எஸ்.மணியம், இசையமைப்பாளர் சுந்தரா, பரத நாட்டியக் கலைஞர் ‘அம்மா’ சூரியா ராமையா, டிஎச்ஆர் வானொலி அறிவிப்பாளர் மாறன், நடிகை ஜாஸ்மின் மைக்கேல், பாடகர் எம்கே, இசையமைப்பாளர் ஜெய் என இருபது மலேசியப் பிரபலங்களைப் பற்றிய சுவையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமின்றி, மலேசியக் கலைஞர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் எஸ்பி சரவணன் ‘கலைக்குடும்ப ஆல்பம்’ என்ற பெயரில் அப்புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.
முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பு
இந்த விழாவில், மலேசியாவின் பிரபல நட்சத்திரங்களான டத்தோ கீதாஞ்சலி ஜி, ஜாஸ்மின் மைக்கேல், சி.குமரேசன், விகடகவி மகேன், ஷைலா நாயர், திலா லக்ஷ்மண், அகோந்திரன் சகாதேவன், கேகே கானா, கே.எஸ்.மணியம், எம்எஸ் கலை, சாரதா சிவலிங்கம், குருஸ்ரீ சந்திர மோகன், யுவாஜி, சசி அப்பாஸ், பென் ஜி, டிஎச் ஆர் மாறன், இசையமைப்பாளர் சுந்தரா, பாடகி எஸ் பி தங்கம், பாலன்ராஜ், இயக்குநர் கார்த்திக் ஷாமளன், இயக்குநர் ஆர்எம்எஸ் சரா, டெனிஸ் குமார், விமலா பெருமாள், பிரேம்நாத், குபேன் மகாதேவன், ஜெயா கணேசன், அஸ்ட்ரோ விஜயராணி, இசையமைப்பாளர் பாலன்ராஜ் என இன்னும் பல முன்னணி கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், மஇகா வைச் சேர்ந்த தலைவர் எஸ்பி மணிவாசகம், தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் இன்பா சுப்ரமணியன், பிரபல வானொலி அறிவிப்பாளர் ரவின் ஷண்முகம், நம்நாடு முருகன், மஇகா இளைஞர் பிரிவைச் சேர்ந்த எஸ்பி பிரபாகரன்,பரத நாட்டியக் கலைஞர் ‘அம்மா’ சூரியா ராமையா, பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர் அக்னி சுகுமார் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
அறிவிப்பாளர்களாக பிரபல பாடகர் மகேந்திரனும், யுத்த மேடை ஜூனியர் புகழ் ஷாலினி பாலசுந்தரமும் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழி நடத்தினர். நிகழ்ச்சியின் ஊடே அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட நகைச்சுவைத் துணுக்குகள் ரசிக்க வைத்தன.
மேலும், இசையமைப்பாளர் ஜெய் குழு மற்றும் சலாம் இசைக்குழுவினரின் பாடல், நடனம் என மேடை விழாக் கோலம் பூண்டது.
நிருபரின் டைரி 2-ல் இடம்பெற்றவர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நாட்டின் முன்னணி இயக்குநர்கள் முன்னிலையில் ‘மலேசியக் கலையுலகம்’ வார இதழின் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பாடகி திலா லஷ்மண் கருப்பாக இருக்கும் தனது நிறத்தை குறிப்பிட்டு ஆரம்பத்தில் தான் புறக்கணிக்கப்பட்டதையும், பின்னாளில் தனது திறமைகள் அங்கீகரிக்கப்பட்டதையும் மேடையில் பகிர்ந்து கொண்டது கலையுலகில் புதியவர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்தது.
அதே போல், நடிகர், இயக்குநர் சி.குமரேசன் பேசுகையில், தான் ஒவ்வொரு மலேசியப் படத்தையும் 3 முறை பார்ப்பதாகவும், காரணம் தான் ஒரு மலேசியப் படங்களின் தீவிர ரசிகன் என்றும் தெரிவித்தார். தான் தயாரிக்கும் படத்திற்கு ஆதரவு கேட்பதற்கு முன் பிறரின் தயாரிப்பு படங்களுக்கு ஒவ்வொரு மலேசியக் கலைஞனும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மலேசிய சினிமா உயரத்தை எட்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, மலேசியக் கலைஞர்களின் திறமைகளுக்கு ஓர் அங்கீகாரம் அளிக்க மாபெரும் விருது வழங்கும் விழா மலேசியாவில் நடத்தப்பட வேண்டும் என்று நடிகை ஜாஸ்மின் மைக்கேல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மலேசியக் கலையுலகத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், கலைஞர்களிடையே ஒற்றுமையும், தொலை நோக்குப் பார்வையும் பெருகி வருவதும் இந்த விழா மேடை அனைவருக்கும் தெளிவாக உணர்த்தியது.
– ஃபீனிக்ஸ்தாசன்