கோலாலம்பூர், டிச 12 – தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவை அனுசரிக்கும் விதமாக ஹிண்ட்ராப் இயக்கம் ஏற்பாட்டில் இரங்கல் கூட்டம் இன்று இரவு நடைபெறவுள்ளது.
இது குறித்து ஹிண்ட்ராப் தேசிய ஊடக தொடர்பாளர் க.சந்திரமோகன் பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டுள்ள செய்தியில்,
“ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் கட்டவிழ்த்து விட்டிருந்த மனிதாபிமானமற்ற இனவெறி அடக்குமுறையை சுட்டெரித்து சுதந்திர விடியலை தென்னாப்பிரிக்க தேசம் முழுதும் பரவச்செய்த நெல்சன் மண்டேலா எனும் மாபெரும் கருஞ்சுடர் அணைந்துவிட்ட துக்கச் செய்தி கேட்டு ஹிண்ட்ராப் அமைப்பு தமது ஆழ்ந்த அனுதாபத்தை பதிவு செய்கிறது. தென்னாபிரிக்க தேசத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே தமது உறுதியான கொள்கைகள் மூலம் என்றென்றும் மெச்சப்படக்கூடிய முன்னுதாரணமாக அமரர் நெல்சன் மண்டேலா அவர்கள் திகழ்கிறார்.”
“தென்னாப்பிரிக்க கறுப்பர்களின் அடிமை விலங்கை தகர்த்தெறிந்த நெல்சன் மண்டேலாவின் மனோதிடம் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். அவர் தடைகள் ஆயிரங்களை தகர்த்தெறிந்தார்,சதிகள் பலவற்றை முறியடித்தார்,சொல்லொனா துயரங்களை தழுவினார்,27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார், காந்தீய வழியை பின்பற்றி இறுதியில் வெற்றியும் அடைந்தார்.
இத்தகைய மகத்தான மாமனிதரை நினைவு கொள்ளும் வகையில் ஹிண்ட்ராப் அமைப்பு ஒரு இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரங்கல் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் தேதி , வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு , எண் 132 . முதல் மாடி , ஜாலான் துன் சம்பந்தன் ( கோலாலம்பூர் சென்ட்ரலுக்கு எதிர்புறம்) என்ற முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”
“இந்த அற்புத மாமனிதருக்கான இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ள மனித உரிமை போராட்டவாதிகளும் , சமூக ஆர்வலர்களும் , பொதுமக்களும் அழைக்கப்படுகிறார்கள். மேல் விபரங்களுக்கு 012 206 5424 , 012 265 8144 அல்லது 012 3122 267 ஆகிய எங்களை தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.