கோலாலம்பூர், டிசம்பர் 13- இக்காலத்தில் பலரும் மிக ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பான உடலுடனும் கவர்ச்சியாக வலம்வர விரும்புகின்றனர். இதற்காக உணவு கட்டுப்பாடுகளையும், உடற்பயிற்சி கூடம் சென்று உடற்பயிற்சிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர்.
இது பலருக்கு பலன்களை தந்தாலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும், திட்டமிட்டபடி உணவை உண்பதும் கடினமான ஒன்று. நாம் சரியான முறையிலும், குறைவாகவும், ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டும். அதிகமான தண்ணீரை பருக வேண்டும், இது எடையை குறைப்பதற்கு உதவும்.
1. பாத்திரத்தின் அளவை குறையுங்கள்
உங்களுக்கு உணவு பரிமாறும் போது எப்போதும் சிறிய தட்டு அல்லது சிறிய கிண்ணம் ஆகியவற்றை பயன்படுத்தவும், எப்போதும் இதை பின்பற்ற வேண்டும். பாத்திரத்தின் அளவு எப்போதும் தேவையான உணவை தாங்கும் வண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். இவ்வாறு செய்வது எளிமையாக உணவை கட்டுபடுத்தும் முறையாகும்.
2. உணவில் கவனம் தேவை
சாப்பிடும் போது எப்போதும் எந்த வகையான வேறு வேலைகளை செய்து கொண்டும் சாப்பிடுவதை தவிர்க்கவும். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டும், தொலைப்பேசியில் பேசிக் கொண்டும், புத்தகம் படித்துக் கொண்டும் உணவை உண்கொள்வதை தவிருங்கள். சாப்பிடும் போது எந்த வித சிந்தனையும் இல்லாமல் வேறு வேலைகளில் கவனம் செலுத்தாமல் சாப்பாட்டில் மட்டும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
3. தண்ணீர் குடிக்கவும்
பொதுவாக பசி எடுக்கும் போதும், தாகம் எடுக்கும் போதும் ஏதேனும் சாப்பிட்டு விடுவோம். இது வழக்கமாக அனைவருக்கும் நடக்கும் விஷயமாகும். ஆதலால் நீங்கள் எப்போதாவது பசித்திருந்தால் முதலில் தண்ணீரை குடிக்கவும். அதன் பிறகும் பசித்தால் உணவு உண்ணவும். உணவு இடைவேளைகளில் அவசியம் தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம். இது உங்களை குறைந்த அளவு சாப்பாடு சாப்பிட வைக்க உதவும். தண்ணீர் குடித்த பின் உணவை உண்டால் குறைவாக உண்ணுவீர்கள்.
4. மெதுவாக உண்ணுங்கள்
எந்த ஒரு உணவையும் விரைந்து உண்ணுதல் தவறு. இப்படி உண்ணும் போது நம்மையும் மீறி அதிகம் சாப்பிட்டு விடுவோம். மெதுவாகவும், அதிகமாக மென்றும் சாப்பிட வேண்டும். உணவை மென்று சுவைத்த பின், அது செரிப்பதற்கு நன்றாக தயாராகி விடும். உணவை குறைத்து மற்றும் நன்கு மென்று சாப்பிடுவது பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.
5. பதப்படுத்திய உணவை தவிர்க்கவும்
பதப்படுத்திய உணவுகளையும் நொறுக்குத் தீனிகளையும் தவிர்ப்பது நல்லது. இத்தகைய உணவை சாப்பிட்டால் எவ்வளவு உணவை உண்டோம் என்ற கணக்கு இல்லாமல் போய்விடும்.
குறைவாக உண்பது என்பதற்காக பசியுடன் இருக்க வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. இத்தகைய வழிமுறைகள் நாம் எடுக்கும் உணவு கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். தினசரி உடற்பயிற்சியாலும், இத்தகைய வழிமுறைகளை பின்பற்றுவதாலும் உடலை ஆரோக்கியமாகவும் கட்டுப்பாட்டுடனும் வைத்துக் கொள்ள முடியும்.