கோலாலம்பூர், ஏப்ரல் 12 – வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் உள்ள கலோரி சத்துக்களின் அளவு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டுமென நாட்டில் உள்ள
உணவகங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
இதன் மூலம் எவ்வளவு கலோரி சத்துக்களை உட்கொள்கிறோம் என்பதை அறிந்து,
அதற்கேற்ப ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பொதுமக்கள் அமைத்துக் கொள்ள
முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்
கூறினார்.
பெட்டிகளில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள கலோரிச்
சத்துக்கள் குறித்த விவரங்கள் தற்போது அப் பெட்டிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதேபோல் உணவகங்களில் இருந்து வாங்கப்படும் உணவுகளில் உள்ள கலோரிச் சத்துக்களின் அளவையும்
குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றார்.
தேசிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் குறித்த ஆய்வின் வழி, 18
வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களில் 63 விழுக்காட்டினருக்கு தொற்று
அபாயமில்லா நோய்கள் (Non-communicable diseases) வருவதற்கான ஏதேனும் ஓர் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.
“எனவே ஆரோக்கியமான உணவு முறை மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை
ஆகியவற்றின் மூலம் ஒவ்வொருவரும் தொற்று அபாயமில்லா நோய்களில் இருந்து
தங்களை தற்காத்துக் கொள்ள முடியும். சிறந்த சுகாதாரத்தை நோக்கி நடைபோடும்
நாட்டிற்கு இது அவசியம்,” என்றார் டாக்டர் சுப்ரமணியம்.
மருத்துவக் காப்பீட்டிற்கான ஜிஎஸ்டி குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு
நிதியமைச்சை கேட்டுக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக
அந்த அமைச்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.