புதுடில்லி, ஏப்ரல் 13 – ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கலாம் என்று உலா வந்த செய்திகளை அந்நிறுவனம் மறுத்துள்ளது. மேலும், அதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுப்பதற்கு இது சரியான தருணமல்ல என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கலாம் என்ற கருத்துக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவன உயர் அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் கூறியதாவது:-
“இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு இது சரியான தருணமல்ல. இதுகுறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். பல வருடங்களாக கடும் பொருளாதார சரிவை சந்தித்து வந்த ஏர் இந்தியா, கடந்த ஆண்டு முதல் மீண்டும் இலாபத்திற்கு திரும்பி உள்ளது. இதைனை இந்திய அரசு கவனத்தில் கொள்ளும்.”
“தனியார் மயமாக்கல் வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டால், சிறப்பு குழுவை உருவாக்கி, தனியார் மயமாக்கல் குறித்து பல்வேறு மட்டங்களில் ஆய்வுகளை நடத்த வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் அதற்கான அவசியம் ஏற்படவில்லை” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா, கடந்த ஆண்டு டிசம்பரில், 14.6 கோடி ரூபாய் நிகர லாபத்தை எட்டியது. தவிர, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், மிகப்பெரிய இலாபத்தை ஈட்டத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், “போர்க்காலங்களிலும், இயற்கை சீற்றங்களின் போதும் ஏர் இந்தியா நிறுவனம் ஆற்றிய சேவையை மத்திய அரசு மறந்து விடவில்லை. அவையெல்லாம், தனியார் மயமாதலில் சாத்தியமாகுமா என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு முடிவெடுக்கும்” என்று கூறியுள்ளார்.