டிசம்பர் 13 – மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் டென்மார்க் பிரதமர் ஹாலி தானிங் ஷிஸ்மிட் ஆகியோருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ஒபாமாவின் மனைவி மெஷெல் இரங்கல் நிகழ்ச்சியை அமைதியாகப் பார்ப்பது போலவும், ஆனால் ஒபாமா சக தலைவர்களுடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக்கொள்வது போலவும் உள்ள புகைப்படத்தைப் பார்த்த பல அமெரிக்கர்கள், “இரங்கல் கூட்டத்தில் தலைவர்களின் செயலைப் பாருங்கள்” என்று புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.
இணையத்தளங்களில் எழுந்த இந்த கடும் விமர்சனங்களை அறிந்த மூன்று நாட்டுத் தலைவர்களும் தனித்தனியாக அறிக்கை விடுத்துள்ளனர்.
டென்மார்க் பிரதமர் ஹாலி தானிங் ஷிஸ்மிட் வெளியிட்ட அறிக்கையில், “அப்போது அங்கு ஆடலும்,பாடலும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதனால் மனம் சற்று தன்னபிக்கையாக இருந்தது. செல்பேசியில் படம் பிடித்தோம். இதையெல்லாம் பெரிசு படுத்தலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் தரப்பில், ‘நமது எதிர்க்கட்சி தலைவரின் மருமகள் விடுத்த வேண்டுகோளை என்னால் தட்ட இயலவில்லை’ என்று தெரிவித்துள்ளார். கேமரூனின் எதிர்கட்சியான லேபர் கட்சி தலைவர் நீல் கின்னக் மகனான ஸ்டீபன் கின்னக்கைத் தான் ஹாலி மணந்துள்ளார்.
இதற்கு ஒபாமா தரப்பில் இருந்து சில புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் ஒபாமாவுக்கும் ஹாலிக்கும் நடுவில் மெஷெல் அமர்ந்திருக்கிறார். ஒபாமா முகத்தில் சந்தோஷம் இன்றி காணப்படுகிறார்.