இதனுடன், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வரலாற்றோடும், குறிப்பாக தென் ஆப்பிரிக்காவின் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்து அதன் மூலம் உலக சரித்திரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியவரின் சகாப்தம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
இனி அவர் இல்லாமல், அவரது வழிகாட்டுதலில் உருவான தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜனநாயகம் தழைத்தோங்குமா அல்லது பின் தள்ளப்படுமா என்பதற்கான விவாதங்களும் எழத் தொடங்கியுள்ளன.
27 ஆண்டுகாலம் கடுமையான சிறைத் தண்டனையை அனுபவித்த போராட்டவாதி மண்டேலா, தனது இடைவிடாத போராட்டத்தின் மூலம் 1994ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.
பின்னர், ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் அதிபராக வெற்றி பெற்று சுமார் பத்தாண்டுகள் தென் ஆப்பிரிக்காவின் அதிபராகப் பணியாற்றினார்.
மண்டேலாவின் இறுதிச் சடங்குகள்…..
ஏறத்தாழ 4,500 பிரமுகர்கள் கூனு என்ற அவரது பூர்விக கிராமத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர். அவர்களில் பிரிட்டனின் இளவரசர் சார்ல்ஸ், அமெரிக்க மனித உரிமை போராட்டவாதி ரெவரெண்ட் ஜெஸ்ஸி ஜேக்சன், தொலைக்காட்சி பிரபலம் ஓப்ரா வின்பிரே ஆகியோரும் அடங்குவர்.
தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமாவும் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார்.
இராணுவ மரியாதையோடு, பாரம்பரிய சடங்குகளும் நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்குகளில் முக்கிய இடத்தைப் பெற்றன.
அவரது நல்லுடலைத் தாங்கியிருந்த சவப்பெட்டி மீது தென் ஆப்பிரிக்க நாட்டுக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் 21 முறை துப்பாக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன.
அவரது நல்லுடல் தாங்கிய சவப்பெட்டி கறுப்பு வெள்ளை கலந்த நிறங் கொண்ட மாட்டுத் தோல் மீது பாரம்பரிய முறைப்படி வைக்கப்பட்டிருந்தது. அதனைச் சுற்றி மண்டேலாவின் வயதைக் குறிக்கும் வகையில் 95 மெழுகுவர்த்திகள் வட்ட வடிவில் ஏற்றப்பட்டிருந்தன.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மண்டேலா காலமானார். தென் ஆப்பிரிக்க நகரான பிரிட்டோரியாவில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அவரது நல்லுடலுக்கு அப்போது முதல் சுமார் ஒரு லட்சம் பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர்.