கோலாலம்பூர், டிச 16 – மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு தன்னை நியமிக்க முன்வந்த ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலிடம் அப்பதவியை தான் வேண்டாம் என சொல்லிவிட்டதாக எஸ்.வேள்பாரி (படம்) தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பழனிவேல் தன்னை சந்தித்ததாகவும், அப்போது தம்மை மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப் போவதாகக் கூறியதாகவும் வேள்பாரி தெரிவித்தார்.
இது குறித்து வேள்பாரி மேலும் கூறுகையில், “உதவித்தலைவர், மத்திய செயலவை உறுப்பினர் போன்ற பதவிகள் மிக உயர்ந்த பதவிகள். கட்சியில் நிறைய பேர் நிறைய ஆற்றலுடனும், திறமையுடனும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறு நான் பழனிவேலிடம் கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், தான் ஏற்கனவே விடுத்த அறிக்கையின் படி, கட்சிக்காக கடுமையான உழைத்து, போட்டியின் வாயிலாக அந்த பதவிகளுக்கு வருவதையே தான் விரும்புவதாகவும் வேள்பாரி கூறியுள்ளார்.
எனவே, தற்போது பழனிவேல் வழங்கும் இப்பதவியை ஏற்றுக்கொண்டால், முன்பு தான் வெளியிட்ட அறிக்கைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என்றும் வேள்பாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதவியை தனக்கு வழங்க முன்வந்த டத்தோஸ்ரீ பழனிவேல் அவர்களுக்கு தான் நன்றியைக் கூறிக் கொள்வதாகவும், தனது ஆதரவும், உழைப்பும், விசுவாசமும் கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் கட்சிக்கு எப்போதும் இருக்கும் என்றும் வேள்பாரி தெரிவித்தார்.
கட்சியின் தேசியத் தலைவர் என்ற அடிப்படையில், மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு மேலும் 9 பேரை நியமிக்கும் அதிகாரம் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு உள்ளதால், வேள்பாரியை நியமிக்க அவர் முன்வந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.