டிசம்பர் 16 – மலேசியாவில் ஏர் ஆசியா நிறுவனத்தைத்தொடங்கி முதல் நிலை கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழும் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் 10 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (52.6 பில்லியன் மலேசிய ரிங்கிட்) மதிப்புடைய மாபெரும் நில மேம்பாட்டுத் திட்டத்தை இலண்டனில் மேற்கொள்ளவுள்ளார்.
மேற்கு இலண்டன் பகுதியில் ஓல்ட் ஓக் (Old Oak area) என்ற பகுதியில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
இந்த திட்டத்திற்குள் அவர் உரிமையாளராக இருக்கும் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் காற்பந்து குழுவுக்கான 40,000 பேர் அமரக் கூடிய வசதி படைத்த காற்பந்து அரங்கமும் அடங்கும்.
40.5 ஹெக்டர் பரப்புடைய நிலத்தில் இலண்டனில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த திட்டத்தில் 24,000 வீடுகளும், 350 அறைகள் கொண்ட ஆடம்பர தங்கும் விடுதியும், பல மில்லியன் சதுர அடிகளைக் கொண்ட கேளிக்கை மையங்களும், வணிக மற்றும் அலுவலகங்களுக்கான இடவசதிகளும் இடம் பெற்றிருக்கும்.
நியூ குயின்ஸ் பார்க் என்ற அழைக்கப்படும் இந்த திட்டம் முடிவடைய ஆறு ஆண்டுகள் பிடிக்கும் என்றும் இந்த திட்டம் 50,000 வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் எஸ்.பி.செத்தியா நிறுவனம், இலண்டன் பேட்டர்சீ என்ற இடத்தில் உருவாக்கும் நில மேம்பாட்டுத் திட்டத்தைவிட பன்மடங்கு பெரியதாக டோனி பெர்னாண்டஸ் மேற்கொள்ளவிருக்கும் திட்டம் திகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான ஒப்பந்தத்தில் இலண்டன் நகர ஆணையர்களோடு குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் காற்பந்து நிறுவனம் கையெழுத்திட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.