டிசம்பர் 17 – மலேசிய சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேலுக்கும், பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநருமான ரஃபிசி ரம்லிக்கும் இடையில் நடந்து வரும் விவாதத்தின் அடுத்த கட்டமாக அப்துல் கனி தனது முழுமையான சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என ரஃபிசி அறைகூவல் விடுத்துள்ளார்.
தனது வங்கிக் கணக்குகளை பார்வையிட அப்துல் கனி வழங்கியிருக்கும் அனுமதியை தான் ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால் அதே வேளையில் வங்கிக் கணக்குகள் மட்டும் அல்லாமல் அப்துல் கனியின் முழுமையான சொத்து விவரங்கள், 2005 முதல் 2010 வரையிலான சொத்து கொள்முதல்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள் வாங்கியுள்ள சொத்து விவரங்கள் போன்றவையும் வெளியிடப்பட வேண்டும் என ரஃபிசி வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
இதுகுறித்து சட்டத் துறைத் தலைவர் கனி பட்டேலுக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாகவும் அதற்கான பதில் கிடைக்கும் வரை தான் காத்திருக்கப் போவதாகவும், ரஃபிசி கூறியுள்ளார்.
முன்னாள் கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் மாட் சைன் வழங்கியுள்ள சத்தியப் பிரமாணத்தின்படி பத்து பூத்தே தீவு மீதான உரிமை கோரும் மலேசியாவின் வழக்கில் பல மில்லியன் ரிங்கிட் கைமாறியுள்ளதாக ரஃபிசி ஏற்கனவே குற்றஞ் சாட்டியிருந்தார் என்பதோடு, இது குறித்து ஹாங்காங் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்கப் போவதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.