கோலாலம்பூர், டிச 19 – மெர்டேக்கா மையம் கடந்த டிசம்பர் 4 முதல் 12 ஆம் தேதி வரை நடத்திய ஆய்வில், பெரும்பாலான மலேசியர்கள் நாடு தவறான பாதையில் செல்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் 1,005 பதிவு பெற்ற வாக்காளர்களில் 49 சதவிகித மக்கள் தவறான பாதையில் நாடு செல்வதாகவும், மீதி 41 சதவிகித மக்கள் அதற்கு நேர்மாறாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், அதாவது நாட்டின் 5 வது பிரதமரான அப்துல்லா படாவி பதவிக் காலத்தின் கடைசி மாதத்தில், 45 சதவிகித மலேசியர்கள் நாட்டின் மீது அவநம்பிக்கை தெரிவித்திருந்தனர். தற்போதைய நிலை அதை விட மோசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் – ஜூலையில் நடத்தப்பட்ட ஆய்வில் 37 சதவிகித மக்களும், ஆகஸ்ட் – செப்டம்பரில் 41 சதவிகித மக்களும், தற்போது 49 சதவிகித மக்களும் நாடு செல்லும் பாதை குறித்து அவநம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் கூறியதை விட தற்போதைய ஆய்வில் இந்தியர்கள் மிகவும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.