புது டில்லி, டிசம்பர் 19 – எதிர்வரும் ஜனவரி முதற்கொண்டு இந்தியாவுக்கான தனது சேவைகளைத் தொடக்கவிருக்கும் மலேசியாவின் மலிவு விலை விமான சேவை நிறுவனமான மலிண்டோ ஏர், அடுத்த ஆண்டு இறுதிக்குள், மேலும் 6 புதிய நகர்களுக்கு பயணத்தை மேற்கொண்டு, பெரிய அளவில் தனது சிறகுகளை இந்தியாவிற்குள் விரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
இந்த மாத இறுதியில் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு சேவையைத் தொடக்கும் மலிண்டோ ஏர், தொடர்ந்து ஜனவரி 2ஆம் தேதி தமிழகத்தின் திருச்சிக்கும், பிப்ரவரி 15 முதல் இந்தியாவின் வணிகத் தலைநகர் மும்பாய்க்கும் பயணங்களை மேற்கொள்ளவிருக்கின்றது.
தனது அடுத்த கட்ட பயண இலக்குகளாக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், கேரளாவின் கொச்சின், தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய நகர்களை மலிண்டோ ஏர் குறிவைத்திருக்கின்றது. இந்த தகவல்களை புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மலிண்டோ ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி சந்திரா ராமமூர்த்தி தெரிவித்தார்.
விமானங்கள் போதுமான அளவுக்கு இருப்பின் பஞ்சாப்பின் அம்ரிட்சர், மகாராஷ்டிராவின் பூனே ஆகிய நகர்களுக்கும் பயணங்களை விரிவாக்கும் நோக்கத்தை மலிண்டோ ஏர் கொண்டிருக்கின்றது.
புதுடில்லி, திருச்சி, மும்பாய் ஆகிய மூன்று நகர்களில் இருந்து மலேசியாவுக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 300,000 ஆக இருக்கின்றது என்றும் அவர்களில் சுமார் 250,000 பேரை தங்களின் விமான சேவையில் பங்கெடுக்க வைக்க முடியும் என்றும் சந்திரா கூறினார்.
சவால் மிகுந்த இந்த மலிவுவிலை விமான சேவைத் துறையில் தாங்கள் இறுதிவரை ஈடுபடப் போவதாகவும், நியாயமான விலைகளை நிர்ணயிக்கப் போவதாகவும் சந்திரா கூறினார்.
மற்ற விமான சேவை நிறுவனங்களுடன் தாங்கள் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும், இருப்பினும் இந்தியாவுக்கான சேவைகளைத் தொடக்கவிருக்கும் மற்றொரு மலேசிய நிறுவனமான ஏர் ஆசியா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என்றும் சந்திரா தெரிவித்தார்.