லடாக், டிசம்பர் 23- ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் கட்டுப்பாட்டு எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் அங்கு முகாம்களை அமைத்துள்ளதாக வெளியான தகவல் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக அருணாச்சல பிரதேசத்தில் ஊடுருவம் சீன ராணுவம் கடந்த சில மாதங்களாக லடாக்கில் அத்துமீற துவங்கியுள்ளனர். லடாக்கிற்கு அருகே ஜெப்சி என்ற இடத்தில் 20க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முகாம் அமைத்து தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 10 கூடாரங்களை அங்கு கண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இந்திய எல்லை பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் 5 பேரை பிடித்து சென்றது. இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து அவர்களை விடுவித்த சீனா மீண்டும் லடாக் பகுதியில் அத்துமீறியுள்ளது.
இதனிடையே சீனாவின் அத்துமீறலை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. எனினும் நேற்று இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு சீனாவின் அத்துமீறலை உறுதி செய்வதாக கருதப்படுகிறது.
காஷ்மீர் எல்லையில் கடந்த ஏப்ரல் மாதம் 19 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய சீன ராணுவம் கூடாரம் அமைத்து தங்கள் நாட்டின் கொடியையும் பறக்கவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.