Home நாடு நஜிப்பின் சிக்கன நடவடிக்கைகளால் எந்த பயனும் இல்லை – ரபிஸி கருத்து

நஜிப்பின் சிக்கன நடவடிக்கைகளால் எந்த பயனும் இல்லை – ரபிஸி கருத்து

621
0
SHARE
Ad

rafiziகோலாலம்பூர், டிச 31 – அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் உதவித்தொகைகளில் 10 சதவிகிதம் குறைத்தாலும், அதனால் எந்த ஒரு பயனும் இல்லை காரணம் அரசாங்கத்தில் வீண் செலவுகலும், ஓட்டைகளும் அதிகம் உள்ளன என்று பிகேஆர் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “செலவினங்களைக் கட்டுப்படுத்துவதாக அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை, விலையேற்றத்தினால் கொதித்துப் போயுள்ள மக்களின் கோபத்தை புரிந்து கொண்டார்கள் என்பதற்கான அறிகுறி தான். ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நஜிப் தனது 16,979 ரிங்கிட் உதவித்தொகையில் 10 சதவிதம் அதாவது 1,698 வெள்ளியை மட்டுமே குறைக்கிறார். ஆனால் பிரதமர் துறை அலுவலகத்தில் சுமார் 6.8 பில்லியன் ரிங்கிட் நிதி மர்மமான வகையில் வெளியே தெரியாமல் உள்ளது. இதை ஜசெக வும் ஏற்கனவே ‘ஊழல் நிதி’ என்று வர்ணித்துள்ளது. ஆனால் மக்களின் பணம் வீணாகப் போனாலும் இந்த நிதியில் இருந்து ஒரு காசு கூட குறைக்கப்படவில்லை” என்று ரபிஸி சாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

அரசாங்கத் துறைகளின் செலவுகளைக் குறைக்கும் வகையில் 11 அம்ச நடவடிக்கைகளை பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று அறிவித்தார். அதன் படி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகியோரது உதவித் தொகைகள் வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 10 சதவிகிதம் குறைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.