கோலாலம்பூர், டிச 31 – செலவினங்களைக் கட்டுப்படுத்த பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று அறிவித்த 11 அம்ச நடவடிக்கைகள் குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. குறிப்பாக பல முக்கியப் புள்ளிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சிக்கன நடவடிக்கை குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மகாதீரின் மகள் மரினா மகாதீர் (படம்), “இந்த 11 அம்ச நடவடிக்கைகள் மூலம் செலவினங்களைக் கட்டுப்படுத்த முடியுமா? வலை இல்லையென்றால் வெற்றி இல்லை. இந்த நடவடிக்கையைப் பொறுத்தவரை போதுமான வலி இல்லை. எனவே மக்களின் அன்பைப் பெறுவது கடினம். மன்னித்துவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் மலாயா பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியர் முகமட் அஸ்ரி ஸைனுல் அபிடினும், “நிறைய பேர் இதை சொல்லத் தயங்குவார்கள். ஆனால் நான் சொல்கிறேன். செலவு குறைப்பு என்பது எல்லா நிலைகளிலும் செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள், மன்னர் குடும்பங்கள் உட்பட” என்று தனது டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நஜிப்பின் இந்த சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து கூறியுள்ளனர்.
அவர்களில் ஜோகூர் மந்திரி பெசார் முகமட் காலிட் நோர்டின், “அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்க நஜிப் அறிவித்துள்ள 11 நடவடிக்கைகள் குறித்து ஆஸ்ட்ரோ அவானியில் முழு அறிக்கை இருக்கிறது. ஆதரவு தாருங்கள்” என்று தனது டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கெராக்கான் இளைஞர் பிரிவுத் தலைவர் டான் கெங் லியாங் கூறுகையில், “நஜிப்பின் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கை சரியான முடிவு” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல்,முன்னாள் துணையமைச்சர் சைபுதீன் அப்துல்லா கூறுகையில், “ மக்கள் கூறும் குறைகளைக் கருத்தில் கொண்டு நஜிப் இந்த சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இது செலவுகளைக் குறைக்க உதவும்” என்று தெரிவித்துள்ளார்.