டெல்லி, ஜன 2- டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நம்பிக்கை வாக்கு கோர உள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த 2 நாட்களிலேயே முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான இலவச குடிநீர் விநியோகம், மின் கட்டணம் பாதியாக குறைப்பு போன்றவற்றை அமல்படுத்தியுள்ளது. மேலும் டெல்லி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறியுள்ளனர்.
டெல்லியில் ஆட்சி அமைத்தது போன்று குஜராத், உட்பட நாட்டின் மற்ற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாகை சூடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துளனர். டெல்லி சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கு கோருகிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே டெல்லியில் மின்கட்டணம் பாதியாக குறைக்கப்பட்ட நிலையில் மின்விநியோகத்தை ஏற்றுள்ள மூன்று தனியார் நிறுவனங்களை தணிக்கை செய்ய மத்திய தணிக்கை துறைக்கு உத்தர விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது