யாழ்ப்பாணம், ஜன 2 – யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களை சந்திக்க வந்த கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 28ம் தேதி யாழ்ப்பாணத்திற்கு வந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழருமான ராதிகா சிற்சபேசன் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான மாவிட்டபுரத்திற்குச் சென்றிருந்தார். அங்குள்ள மக்களை சந்தித்த அவர், அவர்களின் நலன்கள் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று முல்லைத்தீவுக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுடன் அவர் அங்கு செல்லவிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஸ்ரீதரனின் அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர். எனினும் அவர் அங்கு இல்லாததால் காவல்துறையினர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று அதன் நுழைவாயிலில் காத்திருந்தனர்.
இரவு 7 மணியளவில் அவர் டில்கோ விடுதிக்கு திரும்பியபோது அவரை தடுத்து நிறுத்தி கைது செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக தெரிகிறது. ராதிகா சிற்சபசேன் கைது தகவல் கிடைத்தவுடன் கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பேர்டு மற்றும் துணை அமைச்சர் லின்னே யெலிச் ஆகியோர் தங்களது டுவிட்டர் செய்தியில் இந்த கைது தங்களுக்கு ஆழ்ந்த கவலைகளை தந்திருப்பதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.