புது டெல்லி, ஜன 2- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே(வயது 39), தனது வீட்டு பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்சின் விசா விண்ணப்பத்தில் சம்பளம் தொடர்பாக தவறான தகவல்களை அளித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார்.
இதையடுத்து தேவயானிக்கு சட்டப்படியான முழு விலக்குரிமை கிடைக்க ஏற்ற விதத்தில், அவரை ஐ.நா. நிரந்தர தூதரக குழுவில் ஆலோசகராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான வேண்டுகோள் அறிக்கையை ஐ.நா.விடம் இந்தியா முறைப்படி அளித்தது. இதை ஐ.நா.சபை பெற்று அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
இதை அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை கடந்த 20-ந்தேதி பெற்றுக்கொண்டுள்ளது. வழக்கமாக, இப்படி இடமாற்றம் தொடர்பான விவகாரங்களில் வெளியுறவுத்துறை உடனடியாக முடிவு எடுத்து விடும். ஆனால் இரு வாரங்கள் ஆகியும் தேவயானி விஷயத்தில் அது இழுத்தடித்து வருகிறது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அதை பரிசீலனை செய்து வருகிறோம். இந்த பரிசீலனை எப்போது முடியும் என்று யூகித்துக்கூற முடியாது. இதற்கு முன்பு வந்த இதுபோன்ற விண்ணப்பங்களுடன் (தேவயானியின்) விண்ணப்பத்தினை ஒப்பிட முடியாது. ஒவ்வொன்றும் அதன் அதன் தகுதியைப் பொறுத்தே மதிப்பிடப்படுகிறது” என கூறினார்.