புதுடெல்லி, ஜன 3 – மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று மன்மோகன் சிங் இன்று திட்டவட்டமாக அறிவித்தார். மக்களவை தேர்தலுக்கு பின், புதிய பிரதமருக்கு வழி விடுவேன் என்றும், பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி அதற்குத் தகுதியானவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங், “நான் மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கப்போவதில்லை. மத்திய அரசாங்கம் குறித்து எதிர்கட்சிகள் பலர் விமர்சித்து வரும் அதே வேளையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பல கட்சித்தலைவர்கள் கூறிவருகின்றனர். எனவே நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் பொறுப்பை ராகுலிடம் ஒப்படைப்பேன். காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மன்மோகன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தான் வெளிப்படையாகவே தான் செயல்பட்டதாகவும், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.