டெல்லி, மே 8 – 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக சிபிஐ, பிரதமர் மன்மோகன் சிங்கை விசாரிக்க வேண்டும், என்று பாரதீய ஜனதா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது,
டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா அளித்த வாக்குமூலத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் அனுமதி பெற்றே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆ.ராசா அளித்துள்ள இந்த வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதுதொடர்பாக நம்நாட்டுக்கு பதிலளிக்க பிரதமர் கடமைப்பட்டுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்றால், இந்த விசாரணை முழுமையடையாது.
இந்தியாவில் இதுவரை மத்தியில் இருந்த அரசுகளிலேயே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் அதிக ஊழல் நிறைந்ததாகும்என பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.