பினாங்கு, ஜன 4 – பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வாங்கிய மெர்சிடிஸ் பென்ஸ் S300L என்ற காருக்கு 100,000 ரிங்கிட் சலுகை கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சலுகை வழங்கப்பட்டதற்குக் காரணம் விற்பனையாளருக்கும், குவான் எங்கிற்கும் ஏதேனும் உடன்பாடுகள் இருக்கலாம் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து கருத்துத்தெரிவித்த கார் விற்பனை முகவர், இந்த சலுகை குவான் எங்கிற்கு மட்டும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆண்டு இறுதி கழிவு விலையில், மெர்சிடிஸ் பென்ஸ் 2012 ஆம் ஆண்டு S வகை காரை யார் வேண்டுமானாலும் அதே சலுகை விலையில் வாங்கலாம். இந்த சலுகை புதிய கார்களுக்குக் கிடையாது என்றும் கார் விற்பனை முகவர் தெரிவித்துள்ளார்.
பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் அதிகாரப்பூர்வ வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ் S300L என்றும், 298,263.75 ரிங்கிட்டுக்கு வாங்கப்பட்டது என்றும் பினாங்கு அரசாங்கம் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தது.
பினாங்கு மாநில நிதி அதிகாரி மொஹ்டார் முகமட் ஜாயிட், காரின் மொத்த மதிப்பு 657,218 ரிங்கிட் என்றும், மாநில அரசாங்கம் அதற்கு வரி விலக்கு மற்றும் 100,000 ரிங்கிட் சலுகை அளிப்பதாகவும் அறிவித்தார்.
லிம் வாங்கிய கார் 2012 ஆண்டு வகை என்பதையும் அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.