புதுடெல்லி, ஜன 6- யோகா குரு பாபா ராம்தேவின் ‘பாரத் ஸ்வாபிமான் டிரஸ்ட்’ திறப்பு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பாரதியஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தலைவர் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நரேந்திர மோடி பேசியதாவது, “நாட்டில், சுதந்திரத்திற்கு பிறகு நடந்த தேர்தல்கள், அரசியல்கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் மோதல் களமாக இருந்து உள்ளன. ஆனால், இந்த தேர்தலானது இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த அந்த அனைத்து மரபுகளையும் முதல்முறையாக உடைத்தெரியும்.
ஏனெனில், இந்த தேர்தல் ஒரு மக்கள் இயக்கமாக இப்பொழுது மாறிக்கொண்டிருக்கிறது. இந்த மக்கள் இயக்கத்தை உருவாக்க பாபா ராம்தேவ் நிறைய பாடுபட்டு இருக்கிறார். அரசியல் கட்சிகள் வரும் தேர்தலில் முன்னேற்ற பட்டியலை அடிப்படையாகக்கொண்டே களத்தை சந்திக்கின்றன.
நாட்டில் தற்போதைய வரிவிதிப்பு முறைகள், சாதாரணமனிதனுக்கு மிக சுமையாக உள்ளன. எனவே இந்த வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர ஆராய்வது குறித்து உறுதியளிக்கிறேன்” என்று மோடி பேசினார்.