Home இந்தியா தேவயானியை அமெரிக்க அரசு பழி வாங்குவதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம்

தேவயானியை அமெரிக்க அரசு பழி வாங்குவதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம்

564
0
SHARE
Ad

devani

புதுடெல்லி, ஜன 7-அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தேவயானியை குறி வைத்து அமெரிக்க அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

டெல்லியில் நேற்று இது தொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் உயர் தூதர் சல்மான் பஷீர் கூறியதாவது,“ வியன்னா உடன்படிக்கையின் படி, ஒரு நாட்டின் தூதரக அதிகாரிகளை இன்னொரு நாடு எப்படி நடத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையை பொருட்படுத்தாமல் தேவயானி மீது அமெரிக்கா எடுத்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

உலக நாடுகள் அனைத்தும் வியன்னா உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை எழுத்தளவிலும், செயல்முறையிலும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தேவயானிக்கு அமெரிக்காவில் நேர்ந்தது போன்ற மற்றொரு அனுபவம் எந்த நாட்டின் தூதரக அதிகாரிக்கும் இன்னொரு நாட்டில் இனி ஏற்பட கூடாது” என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக, இவ்விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு துறை செயலாளர் ஷார்யார் கான், ‘தூதரக அதிகாரிகளை கையாளும் விதம் தொடர்பாக வியன்னா உடன்படிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய தூதரக அதிகாரி என்ற வகையில் தனக்கு கைதுகளில் இருந்து விலக்கு சலுகை உள்ளது என தேவயானி தெரிவித்த பின்னரும், அவரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தது வியன்னா உடன்படிக்கையை மீறிய செயல் ஆகும்’ என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.