Home நாடு “கமலநாதனைத் தாக்கியவர் அம்னோகாரராக இருந்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – டத்தோ...

“கமலநாதனைத் தாக்கியவர் அம்னோகாரராக இருந்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – டத்தோ ஹென்ரி கண்டனம்!

542
0
SHARE
Ad

Henry-Dato-300-x-200பினாங்கு, ஜனவரி 13 – நேற்று தனது நாடாளுமன்றத் தொகுதி சேவை மையத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது, உலு சிலாங்கூர் அம்னோ இளைஞர் பகுதியின் பொறுப்பாளர் என்று கூறப்படும் நபர் ஒருவரால் கல்வித் துணை அமைச்சரும், சக மத்திய செயலவை உறுப்பினருமான பி.கமலநாதன் தாக்கப்பட்டது குறித்து ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் (படம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அரசாங்கத்தில் துணையமைச்சராகப் பதவி வகிக்கும் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர், மேலும் ஓர் அரசியல் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் இவ்வாறு பகிரங்கமாக மற்றவர்கள் முன்னிலையில் தாக்கப்பட்டது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய சம்பவம் என்றும் குறிப்பிட்ட டத்தோ ஹென்ரி, இது தொடர்பில் போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

“கமலநாதனைத் தாக்கிய நபர் உலுசிலாங்கூர் அம்னோ இளைஞர் பகுதியின் பொறுப்பாளர் என்றும் பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்கியவர் அம்னோவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த தாக்குதல் சம்பவம் மூடி மறைக்கப்படக் கூடாது. போலீசார் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி, தாக்கியவர் மீது வழக்கைப் பதிவு செய்து நடத்த வேண்டும்” என்றும் பினாங்கு மாநிலப் பொருளாளரும், ம.இ.கா பாகான் தொகுதித் தலைவருமான ஹென்ரி வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்யாவிட்டால் இந்த சம்பவம் ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும், இது போன்ற சம்பவங்கள் தொடர்வதற்கும் வழிவகுக்கும் என்றும் ஹென்ரி கூறினார்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் உலு சிலாங்கூர் அம்னோ இளைஞர் பகுதியினரை கமலநாதன் சந்தித்தார். அப்போது, கமலநாதன் வந்திருந்தவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது ஒரு நபர் கமலநாதனை கழுத்தில் தாக்கியிருக்கின்றார். அதனைத் தொடர்ந்து எழுந்த ரகளையினால் சந்திப்புக் கூட்டம் ரத்தாகியிருக்கின்றது.

கமலநாதன் தொடர்ந்து காவல் துறையில் புகார் ஒன்றைச் செய்துள்ளார். இந்த புகார் குற்றவியல் சட்டம் 323ஆம் பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர் என்றும் பத்திரிக்கைத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

“கட்சிப் பணியாற்றுகின்ற தலைவர்களுக்கும், அரசாங்கப் பதவிகள் வகிப்பவர்களுக்கும் பொதுமக்களிடம் மரியாதை ஏற்பட வேண்டும். இத்தகைய தாக்குதல்கள், அவர்கள் மீதுள்ள மரியாதையைக் குலைத்து விடும் என்பதோடு, மற்றவர்களுக்கும் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, காவல் துறையினர் கடுமையான போக்கைக் கடைப்பிடித்து, பாரபட்சமின்றி, கட்சி பேதமின்றி, நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்கிய நபர் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்” என்றும் டத்தோ ஹென்ரி குறிப்பிட்டார்.