Home தொழில் நுட்பம் செயலிகளினால் வருமானத்தை ஈட்டுவதில் அதன் தயாரிப்பாளர்களுக்கு சிரமம்!

செயலிகளினால் வருமானத்தை ஈட்டுவதில் அதன் தயாரிப்பாளர்களுக்கு சிரமம்!

666
0
SHARE
Ad

Apps-300-x200ஜனவரி 14 – திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தால், அந்த திறன்பேசிகளில் பயன்படுத்தும் வண்ணம் செயலிகளை (apps) உருவாக்குவதும் அதிகரித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

இத்தகைய செயலிகளில் சில அதன் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனல் செயலிகளை உருவாக்குகின்ற எல்லா தயாரிப்பாளர்களும் இவ்வாறு செயலிகள் மூலம் வருமானத்தை ஈட்டுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். ஒரு சிறிய சதவீதத் தயாரிப்பாளர்கள்தான், அதுவும் 2018ஆம் ஆண்டு வாக்கில்தான் இந்த செயலிகளின் மூலம் வணிக ரீதியாக வருமானத்தை ஈட்ட முடியும் என கார்ட்னர் (Gartner) என்ற ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

நாளடைவில் செல்பேசிகளிலும், தட்டைக் கணினிகளிலும் பயன்படுத்தும் வண்ணம் செயலிகளை உருவாக்குவது பன்மடங்கு உயரும் என்பதாலும், இதனால் போட்டித் தன்மை மேலும் அதிகரிக்கும் என்பதாலும் செயலிகளின் தயாரிப்பாளர்கள் இவற்றின் மூலம் வணிக ரீதியான வருமானத்தைப் பெறுவது என்பது எளிதான காரியமாக இருக்கப் போவதில்லை.

செயலிகளின் தாயகமாகத் திகழும் கூகுள் பிளே (Google Play) மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-டியூன் போன்ற செயலிகளின் இருப்பகத்தில் (Store) தற்போது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட செயலிகள் இருக்கின்றன.

இதனால், பயனர்களுக்கு பல தேர்வுகள் இருப்பதால், இத்தனை செயலிகளுக்கு மத்தியில் தாங்கள் தயாரிக்கும் செயலிகளை மட்டும் பயனீட்டாளர்கள் கவனிக்கும் வண்ணம் உருவாக்குவதிலும், அதன் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டுவதிலும் தயாரிப்பாளர்கள் பெரும் சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

கார்ட்னரின் ஆய்வறிக்கையின் படி, பணம் செலுத்தி பெறப்படும் செயலிகள் ஒரு நாளைக்கு சுமார் 500 முறைகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. அதன் மூலம் சுமார் 1,250 அமெரிக்க டாலரை இந்த செயலிகளின் தயாரிப்பாளர்கள் வருமானமாகப் பெறுகின்றனர்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இந்த செயலிகள் மேலும் நுட்பமானதாக, நுணுக்கமானதாக மாறும் என்பதோடு, மக்களின் தேவைகளுக்கேற்ப அவற்றை உருவாக்குவது, பரிட்சை செய்து பார்ப்பது, பதிவேற்றம் செய்வது, அதன் பின்னர் அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பது போன்ற பணிகள் மேலும் செலவினங்களைக் கொண்டதாக மாறும்.

இதை வைத்துப் பார்க்கும் போது, 2018ஆம் ஆண்டுக்குள் பத்தாயிரம் செயலிகளில் ஏதாவது ஒன்றுதான் வணிக ரீதியாக வெற்றி பெறும் என மேற்குறிப்பிட்ட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பணம் செலுத்தி பெறப்படும் செயலிகளின் உருவாக்கம் மொத்த செயலிகளில் ஒரு சிறு பகுதியாக இருந்தாலும், அவை பெருகிக்கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் 9.2 பில்லியன் தடவைகள் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த பணம் செலுத்தி பெறப்படும் செயலிகளின் பதிவிறக்கம்   2017ஆம் ஆண்டில் 14.8 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.