இஸ்லாமாபாத், ஜன 20 – மத்திய இணையமைச்சர் சசிதரூருக்கும், அவரது மனைவி சுனந்தா புஷ்கருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், எந்த வித தொடர்பும் இல்லாத நான் பலிகடா ஆக்கப்பட்டு விட்டேன் என்று பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தரர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, டில்லியிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் சுனந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூருக்கும், மெஹர் தரருக்கும் இடையே உள்ள கள்ளத் தொடர்பு தான் அவரது இறப்பிற்கு காரணம் என்று கூறப்பட்டது.
இது குறித்து மெஹர் இன்று பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,
“நான் சசிதரூரை இந்தியாவில் ஒருமுறை, துபாயில் ஒருமுறை என இரண்டு முறை தான் நேரில் சந்தித்துள்ளேன். அப்போது அங்கு ஏராளமானவர்கள் இருந்தனர். சசிதரூரை புகழ்ந்து நான் எழுதிய செய்தி ஒன்று அவரது மனைவிக்குப் பிடிக்காமல் போயிருக்கக்கூடும். அதனால் தன் கணவரை என்னுடன் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.”
“அப்படியிருந்தும், அவர் டுவிட்டரில் எனக்கு தகவல் அனுப்பினார். நான் சசிதரூரிடம் போனில் பேசியது, இ-மெயிலில் தகவல் பரிமாறியதில் அவருக்கு என்ன பிரச்னை என தெரியவில்லை. மற்றவர்களுடன் உரையாடுவது போலத்தான் சசிதரூருடன் பேசினேன்”
“கூகுள் இணையதளத்தில் அவர்களின் பெயரை டைப் செய்தால், அவர்களது திருமண வாழ்வில் கடந்த ஆண்டு முதலே பிரச்னை எழுந்தது பற்றிய செய்திகள் அதிகம் வரும். அப்போது சுனந்தாவுக்கு என்னை தெரியாது, என் மீது எந்த குற்றமும் சுமத்தவில்லை. அவர் அடிக்கடி மனம் உடையும் போதெல்லாம், டுவிட்டரில் தகவல் வெளியிடுவார்.”
“சுனந்தா நீண்டகாலமாகவே அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். கடந்த சில நாட்களாகவே அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். ஒழுங்காக சாப்பிடுவதில்லை. அதிகமாக சிகரெட் பிடித்தார். அவருக்கு காசநோயும் இருந்தது. இதெல்லாம் நான் கூறவில்லை. இந்திய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.”
“கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதில் எனக்கு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை. சதியில் சிக்கி நான் பலிகடாவாகிவிட்டேன்.” இவ்வாறு மெஹர் தரர் கூறியுள்ளார்.