புது டெல்லி – காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானதல்ல என்று டெல்லி காவல்துறை ஆணையர் நேற்று அறிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி, சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்(51), டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெகர் தராருடன், சசி தரூருக்கு தொடர்பு இருந்தாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக சுனந்தா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
அதேசமயம், அவரின் மரணத்தில் சசி தரூருக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுனந்தாவின் மரணம் குறித்து நேற்று டெல்லி காவல்துறை ஆணையர் அளித்துள்ள பேட்டியில், “எங்களுக்கு கிடைத்த கடைசிக்கட்ட அறிக்கைகளின் அடிப்படையில், சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் சுனந்தா புஷ்கர் விஷத்தால் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் எந்த விதமான விஷம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி இங்கு இல்லை.”
“எனவே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுனந்தாவின் உள்ளுறுப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், வாஷிங்டன் நகரில் எப்பிஐ (FBI)-ன் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் இருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில், சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல. அதேவேளையில் காற்றில் கரைந்து மரணத்தை ஏற்படுத்தும் தன்மையுடைய ‘போலோனியம்’ என்ற கதிர்வீச்சு பொருள் அவரது உடல் உறுப்புகளில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.