கோலாலம்பூர், ஜன 25- தமிழர் திருநாள் இன்னிசை இலக்கிய விழா நாளை 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடக்கம் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறவுள்ளதாக விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சி.பாண்டித்துரை கூறினார்.
சுகாதாரத் துறை அமைச்சரும் மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவிற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பு வருகை புரியவுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் காலத்தால் அழியாத பாடல்களுக்கு அதிகமாக இசையமைத்தவர் முடிசூடா மன்னராகத் திகழும் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பதனை யாரும் மறுக்க முடியாது. அவரால் இசையமைக்கப்பட்ட பாடல்களும்,அவரால் பாடப்பட்ட பாடல்களும் என்றென்றும் நினைவில் நிற்கக் கூடியவையாக உள்ளன. தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரும் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களால் தாலாட்டப்பட்டவர்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழகக் கலைஞர்களுடன் உள்நாட்டுக் கலைஞர்களும் இசை விருந்து படைக்கவிருக்கின்றனர். அத்துடன் காலத்தால் அழியாத பழம் பெரும் பாடல்களுக்கு மக்களின் மனங்களைக் கவரக்கூடிய வகையில் விளங்கங்களும் அளிக்கப்படும்.
இதனைத் தவிர்த்து, விழாவின்போது மலேசியத் திருநாட்டில் தமிழுக்காக தொண்டாற்றிய மூவருக்கு சிறப்பு செய்யப்படும்.
இவ்விழாவிற்கான அழைப்பிதழ்களை முன்கூட்டியே ஏற்பாட்டாளர்கள் வழி பெற்றுக் கொள்ளுமாறு ரசிகப் பெருமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ள 03-79716565 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பாண்டித்துரை கேட்டுக் கொண்டார்.