யாங்கூன், ஜன 24- 6 கோடி மக்கள் தொகைகொண்ட தென் கிழக்கு ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நாடான மியான்மரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இனமோதல்கள் நடந்து வருகின்றன.
மியான்மரில் 80 சதவிகிதம் பேர் புத்தமதத்தினர்கள் ஆவர். அங்கு பழங்குடியினர் 6 % , பிராடஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் 5 % , முஸ்லிம்கள் 5% மற்றும் இந்துக்கள் 2 சதவிகிதத்தினரும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் மேற்குபகுதியில் உள்ள ராக்கைன் மாவட்டத்தின் ரோஹிங்கிய முஸ்லிம் கிராமத்தில் புத்த மதக் கலவரக்காரர்கள் ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தினர். கத்திகளை கொண்டு கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஆனால், இப்பகுதியில் உள்ள ரோகிங்யா முஸ்லிம் கிராமத்தினர் காவல் அதிகாரியை தாக்கினர் என்று இச்சம்பவத்தை அரசு மறுத்துள்ளது. இருந்தும் இனப்படுகொலைகள் அங்கு நடந்து கொண்டிருப்பதற்கான சாட்சியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.