கோலாலம்பூர், ஜனவரி 24 – ம.இ.காவின் முன்னாள் தலைமைச் செயலாளரும், பூச்சோங் ம.இ.கா தொகுதியின் தலைவருமான ஏ.சக்திவேல் (படம்) தெனாகா நேஷனல் பெர்ஹாட் எனப்படும் தேசிய மின்சார வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகின்றது. ஒரு பொது நிறுவனத்தில் இயக்குநராக அவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.
ம.இ.காவைப் பிரதிநிதிக்கும் நடப்பு இயக்குநர் டான்ஸ்ரீ ஹரி நாராயணனுக்குப் பதிலாக சக்திவேல் இந்த பொறுப்பை ஏற்கின்றார். ஹரி நாராயணனின் பதவிக் காலம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதியோடு முடிவடைந்தது.
நடந்து முடிந்த ம.இ.கா கட்சித் தேர்தலில் சக்திவேல் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தேசியத் தலைவர் பழனிவேலுவால் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து தேர்தல் முடிந்ததும் அகற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சக்திவேலுவுக்கும், பழனிவேலுவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாகவும், சக்திவேல் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகின. இருப்பினும் சக்திவேல் அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில், சக்திவேலுவை தேசிய மின்சார வாரியத்தில் நியமித்திருப்பதன் மூலம் அவரைத் தனது அரசியல் அரவணைப்பில் தொடர்ந்து வைத்திருக்க பழனிவேல் முடிவு செய்துள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.
13வது பொதுத் தேர்தலில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக ம.இ.காவின் சார்பில் போட்டியிட்ட சக்திவேல் தனது முயற்சியில் தோல்வி கண்டார். இருப்பினும், முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ முருகேசனின் பதவி விலகலைத் தொடர்ந்து காலியான தலைமைச் செயலாளர் பதவிக்கு சக்திவேல் நியமிக்கப்பட்டார்.