Home Featured நாடு “என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை – புனையப்பட்டவை” சக்திவேல் கூறுகிறார்!

“என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை – புனையப்பட்டவை” சக்திவேல் கூறுகிறார்!

617
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தன்மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் அனைத்தும் பொய்யானவை – புனையப்பட்டவை என்று மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ சக்திவேல் அழகப்பன் (படம்) தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

Sakthivel-Slider“அண்மையில் முன்னாள் மஇகா உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நடத்திய ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் என்மீது சுமத்தியிருந்த ஊழல், மிரட்டிப் பணம் பறித்தது போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் எனப்படும் தேசிய மின்சார வாரியத்தில் நான் வகிக்கும் நிர்வாக அதிகாரமில்லாத இயக்குநர் பதவியைப் பயன்படுத்தி அதிகார முறைகேடுகள் செய்தது என்ற குற்றச்சாட்டு தொடர்பிலும், அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பைத் தொடர்ந்து, அச்சு ஊடகங்களிலும், இணையத்தள செய்தி ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகள் தொடர்பிலும் நான் சில விளக்கங்களை வழங்க விரும்புகின்றேன்” என இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார் சக்திவேல்.

“டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும், முறைகேடுகளையும் நான் முழுமையாக, வன்மையாக மறுக்கின்றேன். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கெட்ட உள்நோக்கத்தோடும், என்மீது அவதூறு பரப்பும் வண்ணமும் மேற்கொள்ளப்பட்டவை. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையானவை என்றும் அவற்றில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்றும் நான் ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன்” என்றும் சக்திவேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

datuk-ramanan-mic“தேசிய மின்சார வாரியத்தின் நிர்வாக அதிகாரமில்லாத இயக்குநராக நான் நியமிக்கப்பட்டது முதல், இன்று வரை, எனது கடமைகளை நான் வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் மேற்கொண்டு வந்திருக்கின்றேன். தேசிய மின்சார வாரியம் அல்லது அதுபோன்ற ஓர் அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களில் குத்தகைகள் வழங்கப்படும் நடைமுறைகள் குறித்து ரமணனுக்கு உண்மையான, முழுமையான விவரங்கள் தெரியவில்லை எனக் கருதுகின்றேன்” என்று சக்திவேல் மேலும் கூறியுள்ளார்.

“ஒவ்வொரு குத்தகையும் வழங்கப்படும்போது அதற்கென முறையான சில நடைமுறைகளும், விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன என்பதோடு அதை முடிவு செய்வது ஒரு தனி மனிதனின் கரங்களில் இல்லை. ரமணன் இந்த சமயத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும், பல கேள்விகளை உருவாக்குவதாகவும் இருப்பதாக நான் கருதுகின்றேன். அண்மையக் காலமாக ரமணன் வரிசையாக ஒவ்வொரு மஇகா தலைவர் மீதும் தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றார். அந்த வரிசைப் பட்டியலில் நான் கடைசியாக இடம் பெற்றிருக்கின்றேன்” என்பதையும் சக்திவேல் தனது இன்றைய அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

MIC-Logo-Feature“நீதிமன்றத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் சங்கப் பதிவகம் தொடர்பான வழக்கில் ஒரு தரப்பாக மஇகாவும் வழக்காட அனுமதிக்கப்பட வேண்டும் என நான் தலைமைச் செயலாளர் என்ற முறையில் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட சில நாட்களில் ரமணன் இந்தக் குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்தியிருக்கின்றார். எனது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் என்ற முறையில் நானும் ஒரு சாட்சியாவேன் என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” எனவும் மஇகா பூச்சோங் தொகுதித் தலைவருமான சக்திவேல் கூறியுள்ளார்.

“மஇகா தலைவர்கள் மீது அவதூறு பரப்புவதற்கும், கட்சியில் குழப்பம் ஏற்படுத்துவதற்கும் ரமணன் தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். என்மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல், கட்சியின் நிலைத்தன்மையைக் குலைப்பதற்கு அவர் தொடர்ந்து செய்து வரும் இடையூறுகளில் ஆகக் கடைசியாக அரங்கேற்றப்பட்டிருக்கும் மற்றொரு நாடகமாகும். நமது முன்னோர்கள் பல நல்ல காரணங்களுக்காக சூட்டிய மஇகா என்ற பாரம்பரியமான நமது கட்சியின் பெயரை “மலேசிய கிரிமினல் கட்சி” என கீழ்த்தரமாக வர்ணிக்கும் அசிங்கமான நிலைமைக்கு தற்போது ரமணன் சென்றிருக்கின்றார்” என்றும் சக்திவேல் ரமணனை தனது அறிக்கையில்  சாடியுள்ளார்.