பாகான் செராய் (பேராக்) – எதிர்காலத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி என்பது வருங்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிடும் என தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிருவாகி டத்தோ பி.சகாதேவன் கூறியுள்ளார்.
பள்ளியின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவத்தை திறந்து வைக்கும் டத்தோ பி.சகாதேவன்…
அண்மையில் நடைபெற்ற பேராக், பாகான் செராய் வட்டாரத்திலுள்ள சூன் லீ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கணினி நடுவத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே சகாதேவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சகாதேவனின் உரை…
“கணினி அறிவும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பக் கல்வியும் இன்று முக்கியமான, முதன்மையான அறிவுத் துறைகளாக வளர்ச்சி கண்டுள்ளன. எல்லாப் பொருளும் இதன்பால் உள என்று திருக்குறளைப் பெருமையாகக் கருதுகிறோம். அதேபோல, எல்லாத் துறைகளும் இன்று கணினிக்குள் வந்துவிட்டன. கணினித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அதனுடைய வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கின்றது” என்றும் சகாதேவன் தனது உரையில் மேலும் கூறியுள்ளார்.
சூன் லீ தமிழ்ப் பள்ளி கணினி நடுவத் திறப்பு விழாவில் சகாதேவன், பிரமுகர்கள்…
“இந்தக் கணினி அறிவையும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பக் கல்வியையும் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் வருங்காலத்தில் வாழ இயலாமல் போய்விடும். அதனால்தான், தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் தனது தோட்டங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் கணினி நடுவத்தை அமைத்து வருகின்றது” என்று தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிருவாகியுமான டத்தோ பி.சகாதேவன் தெரிவித்தார்.
சூன் லீ பள்ளியின் கணினி நடுவத்தைத் திறந்து வைக்கும் சகாதேவன்…
மேலும் பேசுகையில், அதற்கு எடுத்துக்காட்டு இன்று இந்தச் சூன் லீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கணினி நடுவத்தை அமைத்துக் கொடுத்துள்ளோம், இந்தப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் இந்தக் கணினி நடுவத்தின் மூலமாக தகவல் தொடர்புத் தொழில்நுட்பக் கல்வியைக் கற்றுகொள்வார்கள் என அவர் கூறினார்.
மேலும், இந்தப் பள்ளியின் மாணவர்களின் நலனுக்காக ஒரு அறிவியல் கூடத்தையும் அமைக்க உள்ளோம் என்றும் பலத்த கரவொலிக்கு இடையில் டத்தோ பி.சகாதேவன் அறிவித்தார்.
70,000 ரிங்கிட் செலவில் அமைக்கப்பட்ட கணினி நடுவம்
எழுபதாயிரம் ரிங்கிட் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கணினி நடுவத்தில் இருபத்தொரு கணினிகளும் அச்சுக் கருவி மற்றும் இணைய வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடுவத்தை நவீனமான முறையில் மிகவும் நேர்த்தியாக அமைத்துக்கொடுத்த தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் தலைவர் குணசேகரன் கந்தசுவாமிக்கு நன்றி கூறுவதாக டத்தோ பி.சகாதேவன் கூறினார்,
நினைவுக்காக ஒரு படம் – பின்னணியில் உள்ள பதாகையில், இந்தக் கணினி நடுவத் திட்டத்தில் பங்களிப்பு வழங்கிய முரசு அஞ்சல் மென்பொருள், செல்லினம் குறுஞ்செயலி ஆகியவற்றின் முத்திரைச் சின்னங்களைக் காணலாம்…
அடுத்து பேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் தலைவர் குணசேகரன், மலேசியாவில் இதுவரை அறுபது தமிழ்ப்பள்ளிகளில் இம்மாதிரியான தகவல் தொடர்புத் தொழில்நுட்ப நடுவங்கள் அமைக்கப்பட்டுவிட்டன என்றும், அவற்றில் ஏறக்குறைய இருபத்து இரண்டாயிரம் தமிழ் மாணவர்கள் கணினிக் கல்வியைப் பயின்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இதில் சிறப்பு என்னவென்றால், இவர்கள் அனைவரும் முழுக்க முழுக்கத் தமிழ்மொழியிலேயே தகவல் தொழில்நுட்பத்தைப் படித்து வருகின்றனர் என்பதுதான் எனவும் குணசேகரன் பெருமிதத்துடன் கூறினார்.
தித்தியான் டிஜிட்டல் திட்டம்
தமிழ்ப்பள்ளிகளில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப நடுவங்களை அமைக்கும் தித்தியான் டிஜிட்டல் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரையில் பதினைந்தாயிரம் மாணவர்கள் தமிழ்மொழியிலேயே தகவல் தொழில்நுட்பத்தைப் பயின்று இடைநிலைப்பள்ளியில் சிறந்த முறையில் கல்வியைத் தொடருகின்றனர்.
கணினி நடுவத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சகாதேவனோடு மற்ற பிரமுகர்கள்
கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கு ஏற்ப தகவல் தொடர்புத் திறனைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் வழி புறநகர், நகர்ப்புறங்களில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டாரப் பொதுமக்கள் எனப் பலரும் பயனடைந்து வருகின்றனர் என்று தித்தியான் டிஜிட்டல் தலைவர் குணசேகரன் கந்தசுவாமி தெரிவித்தார்.
முன்னதாகப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.சி.விஜயலட்சுமியும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வாசு முனியாண்டியும் பள்ளியின் சார்பில் உரையாற்றினர். பள்ளியின் ஆசிரியர் சுப.சற்குணன் நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார்.