டல்லாஸ் – 5 அமெரிக்கப் போலீஸ் படையினரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிக்காரன் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க காவல் துறையினர் அவனது இல்லத்தில் அதிரடியாக நுழைந்து சோதனைகளையும் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் 12 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
அந்தத் தாக்குதல்காரன் 25 வயதுடைய மிக்கா சேவியர் ஜோன்சன் (படம்) என்றும் அவன் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றும், முன்பு ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய முன்னாள் இராணுவ வீரன் என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
அந்தத் துப்பாக்கிக்காரன் காவல் துறையின் பதிலடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான்.
டல்லாஸ் நகரில் நடந்தது என்ன?
அண்மையில் சில கறுப்பினத்தவர்கள் வெள்ளைக்கார போலீஸ்காரர்களால் குறி வைக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து நாடெங்கிலும் பல கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. டல்லாஸ் நகரிலும் அவ்வாறே கண்டன ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.
டல்லாஸ் காவல் துறை தலைமையகத்தின் முன் உயிரிழந்த காவல்னு துறையினருக்காக அனுதாபச் செய்திகளோடு பூங்கொத்துகள்..
அப்போது குறிபார்த்து தூரத்தில் இருந்து சுடும் துப்பாக்கியைக் கொண்டு ஜோன்சன் என்பவன் கண்டன ஊர்வலத்திற்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த வெள்ளைக்கார காவல் துறையினரை நோக்கி சுட ஆரம்பித்தான். இந்தத் தாக்குதலில் ஐந்து வெள்ளைக்கார காவல் துறையினர் கொல்லப்பட்டனர்.
இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லை என்றும் ஒரே ஒரு நபர் தனியாக இயங்கிய சம்பவம் என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.
தாக்குதல்காரன் எவ்வாறு கொல்லப்பட்டான்?
தாக்குதல்காரன் திட்டமிட்டு, நன்கு யோசித்து கொலை செய்துள்ளான் என்று கூறிய காவல் துறையினர், அவனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவனைச் சரணடைய முயற்சி செய்தனர். ஆனால், அவன் ஒரு கட்டிடத்தின் வெவ்வேறு மாடிகளில் இருந்து தொடர்ந்து தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருந்தான்.
இதனைத் தொடர்ந்து, அவனை நோக்கி வெடிகுண்டுகளைக் கொண்ட இயந்திர மனிதன் கருவி ஒன்றை காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். அந்த இயந்திர மனிதக் கருவியில் இருந்த வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டதில் அந்தத் தாக்குதல்காரன் கொல்லப்பட்டான்.
நேற்று வெள்ளிக்கிழமை காவல் துறையினர் அவனது இல்லத்தைச் சோதனையிட்டனர். அப்போது வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், அதிரடித் தாக்குதல் நடத்துவதற்கான நடைமுறைகள் கொண்ட பயிற்சிப் புத்தகங்கள் போன்றவற்றைக் கண்டெடுத்தனர்.
இதற்கிடையில் மேலும் மூன்று சந்தேக நபர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த வாரம் தான் மேற்கொள்ளவிருக்கும் ஐரோப்பிய வருகைக் காலத்தை ஒரு நாள் சுருக்கிக்கொண்டு டல்லாஸ் நகருக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.