கோலாலம்பூர், ஜனவரி 25 – ம.இ.கா தலைமைப் பொருளாளர் டத்தோ ஆர்.ரமணன், டாக்டர் மகாதேவனிடம் தான் பெற்ற 5.5 மில்லியன் ரிங்கிட் பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என நேற்று வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து, அவர் மீது குற்றவியல் (கிரிமினல்) வழக்கு நடத்தப்பட வேண்டுமென ஜ.செ.க. தலைவரும், பிரபல வழக்கறிஞருமான கர்ப்பால் சிங் அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்தப் பணத்தை ரமணன் மோசடித்தனமாகப் பெற்றார் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் ரமணன் மீது குற்றவியல் வழக்கு தொடர வேண்டிய அதே நேரத்தில், காவல் துறையினர் குற்றவியல் சட்டம் 420இன் கீழ் ரமணனை விசாரிக்க வேண்டும் என்றும் கர்ப்பார் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரமணன் மீது இந்த விவகாரம் தொடர்பில் காவல் துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன என்பதையும் கர்ப்பால் சுட்டிக் காட்டினார்.
ரமணன் தன்னை தவறாக டாக்டர் மகாதேவனிடம் பிரதிநிதித்துக் கொண்டார் என்றும், மோசடித்தனமாக 5.5 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றார் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கண்டு பிடித்து தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து ரமணன் மீதிலான தக்க நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கர்ப்பால் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
“சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. குற்றவியல் வழக்கு தொடர போதுமான ஆதாரம் இருந்தால், ஒரு மனிதன் அவன் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், அவன் சட்டத்தின் நீண்ட கரங்களின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது. இந்த விவகாரத்தில் பெரிய தொகை சம்பந்தப்பட்டிருப்பதாலும், ரமணன் ம.இ.காவின் தலைமைப் பொருளாளராக இருப்பதாலும் இந்த விவகாரம் கடுமையாகக் கருதப்பட வேண்டும்” என்றும் கர்ப்பால் கூறியுள்ளார்.