ஜனவரி 26 – நாட்டில் பொருட்களின் விலையேற்றம் பெருகி வருவது குறித்து வாதப் பிரதிவாதங்கள் பரவலாக நடைபெற்று வரும் வேளையில் “W1N” என்ற கார் எண்ணை ஜோகூர் சுல்தானாகிய சுல்தான் இஸ்கண்டார் 748,000 ரிங்கிட்டுக்கு வாங்கியுள்ளார்.
இருந்தாலும் தனது இந்த நடவடிக்கையானது மக்களுக்குப் பயனையே விளைவிக்கும் என்றும் காரணம் இந்தப் பணம் மக்களுக்கே சென்றடையும் என்றும் அவர் கூறியுள்ளார். மக்களுக்கு இந்தப் பணத்தால் கிடைக்கப் போகும் நன்மைகளோடு ஒப்பிடுகையில் தான் செலுத்தும் இந்த தொகை சிறியதே என்றும் ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.
முறையான நடைமுறைகளின்படி, தான் போக்குவரத்து இலாகாவிடம் தனது ஏலத்தைச் சமர்ப்பித்ததாகவும், இந்த தொகையானது இறுதியில் மக்களைச் சென்றடையும் என்பது தனக்குத் தெரியும் என்பதால்தான் தான் இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முன்வந்ததாகவும் ஜோகூர் சுல்தான் கூறியுள்ளார்.
தான் வாங்கிய புதிய கார் எண்னை புரோட்டான் சுப்ரிமா எஸ் என்ற 80,000 ரிங்கிட் பெறுமானமுள்ள காருக்கு ஜோகூர் சுல்தான் பொருத்தியுள்ளார்.
இதற்கு முன்னால் “WWW-1” என்ற எண்ணுக்கு 520,000 ரிங்கிட் செலுத்தி அந்த எண்ணை ஜோகூர் சுல்தான் பெற்றபோது அந்த நடவடிக்கை நாட்டில் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.