சென்னை, ஜன 27- ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கி, தயாரித்திருக்கும் படம், ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’.
இந்தப் படத்தில் ஷர்வானந்த், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார்.
பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று வெளியாக இருக்கும் இப்படம் குறித்து நடிகர் சேரன் உணர்ச்சிபூர்வமாக தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
நடிகர் சேரன் தனது பேஸ்புக் வலைதளத்தில் கூறியதாவது, “ வணக்கம் நண்பாஸ், படம் முடிஞ்சு ரீலிசுக்கு ரெடியா இருக்கு, பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று நண்பனின் வாழ்க்கையை உங்களோடு பகிரலாம் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு சினிமாவிலும் ஒவ்வொரு புது விடயம் கற்றுக்கொள்வேன். இந்த சினிமாவும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. எதற்காக இந்த போராட்டம், நல்ல சினிமாவை காதலித்து தானே சென்னை நோக்கி ஓடி வந்தோம்! உறவுகளை ஒதுக்கி, நண்பர்களை மறந்து, காதலியைக் கூட பிரிந்து அவளுக்கும் மேலே காதலித்த சினிமாவை நோக்கி வந்தோமே.
அந்த சினிமா இப்போது எப்படி இருக்கிறது, எங்கே சிக்கிகொண்டு இருக்கிறது, சினிமாவை வெறும் குத்தாட்ட அழகியாக நினைத்து எல்லோரும் மாறி மாறி கற்பழிக்கிறார்கள் வணிகம் என்ற பெயரில், அவர்களுக்குள் இருந்து என் காதலியை மட்டும் மீட்டுக்கொண்டு எங்காவது ஓடி விட வேண்டும்போல இருக்கிறது.
அப்படிப்பட்ட என் மானசீக காதலிக்கு இந்தப் படத்தில் நட்பின் அருமை உணரும் வேடம், காதல் இல்லாத ஆர்ப்பாட்டம் இல்லாத , ஆஆஆ….. ஊஊஊ என கத்தாத இறைச்சல் இல்லாத அதே நேரம் காசு கொடுத்து பார்க்கும் உங்களின் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய சினிமா.
மிக உயர்ந்த தரத்தில் அதிக செலவில் எடுத்துள்ளேன், என்னை முற்றிலும் புதுப்பித்து, இதற்கு முன் நான் செய்த எந்த படத்தின் சாயலும் இல்லாமல் உணர்வை தவிர, உங்கள் ஆதரவை மட்டுமே எப்பவும் போல நம்பி, ஆனால் இந்த சினிமாவோடு என் காதலியை அழைத்துக்கொண்டு எங்கோ போய், இது “சேரன் எனும் நண்பனின் வாழ்க்கை”, என்று எழுதியுள்ளார்.