கோலாலம்பூர், ஜன 28 – மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். ஆனால், இன்று மண்பானையில் சமைக்கும் பழக்கம் குறைவிட்டது என்றே சொல்ல வேண்டும். இப்போது சந்தையில் தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மண்பானையில் சமைப்பதனால் ஏற்படும் நன்மைகளை சற்றுக் கண்போம் வாரிர்.
மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.
மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது. மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கிய மானதாகும்.