பாங்காக், ஜன 29- தாய்லாந்தின் தற்போதையப் பிரதமர் இங்லக் ஷினவத்ரா பதவியிலிருந்து விலக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதிப் தாக்சுபன் தலைமையில் தொடங்கிய போராட்டங்கள் நாளுக்குநாள் வலுவடையத் தொடங்கவே நாடாளுமன்றத்தைக் கலைத்த இங்லக் பிப்ரவரி 2ஆம் தேதி பொதுத் தேர்தலை அறிவித்தார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும், பிரதமர் இங்லக்கிற்கும் இடையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், வன்முறைக் கலவரங்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி தேர்தலை வரும் ஞாயிறன்று நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக தாய்லாந்தில் காணப்பட்டு வரும் அரசியல் மோதல்களின் உச்சகட்ட ஆர்ப்பாட்டங்களே தற்போது நடைபெற்று வருகின்றன. இங்லக் மற்றும் அவரது சகோதரர் தக்சினை ஆதரிக்கும் ஏழை, கிராமப்புற ஆதரவாளர்களுக்கு எதிராக பாங்காக்கின் நடுத்தர வர்க்கமும், மன்னர் விசுவாசிகளும் குவிந்துள்ளதே இந்த சமீபத்திய போராட்டங்களின் அடிப்படையாகும் என்பது குறிப்பிடதக்கது.