Home நாடு “அன்வார் போட்டியிடலாம், ஆனால் வாக்களிக்க முடியாது” – தேர்தல் ஆணையம்

“அன்வார் போட்டியிடலாம், ஆனால் வாக்களிக்க முடியாது” – தேர்தல் ஆணையம்

514
0
SHARE
Ad

anwarபெட்டாலிங் ஜெயா, ஜன 30 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் காஜாங் இடைத்தேர்தலில் போட்டியடத் தகுதி பெற்றிருந்தாலும் அவரால் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அவர் தனது அடையாள அட்டையிலுள்ள முகவரியை சிலாங்கூர் மாநிலத்தின் எந்த பகுதிக்கு மாற்றினாலும், தேர்தல் ஆணையத்தை அணுகி தனது முகவரி மாற்றம் குறித்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் அவரது வாக்காளர் முகவரியை தேர்தல் ஆணையம் மே மாதம் மட்டுமே மாற்ற இயலும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஸீஸ் முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“தேசிய பதிவு இலாகாவால் ஒருவரின் அடையாள அட்டையிலுள்ள முகவரியை சில நாட்களில் மாற்றம் செய்து கொடுக்க இயலும். ஆனால் வாக்காளர் அட்டையில் மாற்றம் செய்வது அவ்வளவு எளிதல்ல. அது ஒரு பெரிய வேலை. எனவே அதை தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் தான் செய்யும்” என்றும் அப்துல் அஸீஸ் குறிப்பிட்டுள்ளார்.

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராகிம், காஜாங்கிலுள்ள தனது உறவினர் வீட்டின் முகவரிக்கு தனது அடையாள அட்டையை மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் அன்வாரின் இந்த விண்ணப்பம் குறித்து கருத்து கூற தேசிய பதிவிலாகாவின் பேச்சாளர் மறுத்துவிட்டார்.

சட்டப்பிரிவு 53 -ன் படி சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு, சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்த, 21 வயது நிரம்பிய, அனைத்து சட்ட திட்டங்களுக்கும் தகுதி வாய்ந்த நபரால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்கட்கிழமை காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ தனது பதவியை திடீர் ராஜினாமா செய்தார். அன்வார் சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசாராக ஆவதற்கு வழி விடும் வகையில் தான் லீ பதவி விலகினார் என்று கூறப்பட்டது.

அதை நிரூபிக்கும் வகையில், அதற்கு அடுத்த நாளில் காஜாங் இடைத்தேர்தலில் அன்வார் போட்டியிடுவது உறுதியானது.