பெட்டாலிங் ஜெயா, ஜன 30 – ம.இ.காவின் புதிய தலைமைப் பொருளாளராக அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் தனக்கு எதிரான தீர்ப்பு பெற்ற டத்தோ ரமணன் ம.இ.காவின் தலைமைப் பொருளாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் கூறுகையில், “ம.இ.காவின் அனைத்து சொத்துக்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நேர்மையான பின்புலம் இதற்கு பக்கபலமாக இருக்கும். அவர் கட்சியின் கணக்கு வழக்குகள், சொத்துக்கள் அனைத்தையும் முறையான வகையில் வழி நடத்துவார்” என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பிரபல மனநல மருத்துவர் டாக்டர் எம்.மகாதேவனிடம் இருந்து மோசடித்தனமாகப் பெற்ற 5.5 மில்லியன் ரிங்கிட்டை திரும்ப செலுத்த வேண்டுமென முன்னாள் ம.இ.காவின் தலைமைப் பொருளாளர் ரமணனுக்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.