பிப்ரவரி 1 – இன்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டி மாமன்னரால் வழங்கப்படும் விருதுகளைப் பெறுபவர்களில் கிம்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் சைட் இப்ராகிம் பின் காதரும் (படம்) இடம் பெறுகின்றார். டத்தோஸ்ரீ என்னும் உயரிய விருதை அவர் பெறுகின்றார்.
மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியின் தேசியத் தலைவர் கே.எஸ்.நல்லாவும் டத்தோஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். RAM ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.கோவிந்தனுக்கும் டத்தோஸ்ரீ விருதைப் பெறுகின்றார்.
ஆக, டத்தோஸ்ரீ என்னும் உயரிய விருதை இம்முறை மூன்று இந்தியர்கள் பெற்றுள்ளனர்.
டத்தோ விருதுகள்
இவர்களைத் தவிர டத்தோ விருதை இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சரும் ம.இ.கா தேசிய உதவித் தலைவருமான எம்.சரவணன் பெறுகின்றார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி நளினி பத்மநாபனுக்கும் டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வெளியுறவுத் துறை துணையமைச்சரும் கெராக்கான் கட்சியின் உதவித் தலைவருமான கோகிலன் பிள்ளையும் டத்தோ விருது பெறுகின்றார்.
அரசு சேவையில் உள்ள சில இந்தியர்களுக்கும் டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் துறையின், பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் துணை தலைமை இயக்குநர் யோகேஸ்வரன் குமரகுரு, தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சின் துணை தலைமைச் செயலாளர் நாகராஜன் மாரி ஆகியோர் டத்தோ விருது பெறும் அரசாங்க அதிகாரிகளாவர்.
பிரதமர் துறையின் தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாட்டு மையத்திற்கான பொறுப்பாளர் பேராசிரியர் ராஜேந்திரன் நாகப்பன் டத்தோ விருது பெறும் மற்றொரு அரசாங்க அதிகாரியாவார்.
ஐபிஎஃப் கட்சியின் ஆலோசகர் சுகுமாரன் பார்த்தசாரதி, மலேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்தவரும் அந்த கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரனின் சகோதரருமான ரமேஷ் ராமன் குட்டி ஆகியோருக்கும் டத்தோ விருது வழங்கப்பட்டுள்ளது.
கேஎல்சிசி புரோபர்ட்டி நிறுவனத்தின் இயக்குநர் பிரகாசமூர்த்தி கிருஷ்ணசாமி, கூட்டரசுப் பிரதேச ஓட்டப் பந்தய சங்கத்தின் செயலாளர் விஜயத்துமன், ஆகியோரும் டத்தோ விருது பெறுகின்றார்கள்.
ஆக மொத்தம் 10 இந்தியர்கள் இந்த முறை டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களைத் தவிர மற்ற விருதுகளைப் பெறுபவர்களோடு சேர்த்து மொத்தம் 320 பேர் கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு மாமன்னரிடம் இருந்து விருதுகளைப் பெறுகின்றார்கள்.