Home கலை உலகம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 4 – திவாகர் வெற்றி பெற்றார்!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 4 – திவாகர் வெற்றி பெற்றார்!

875
0
SHARE
Ad

Star vijay logo 300 x 200பிப்ரவரி 2 – உலகமெங்கும் உள்ள தமிழ் ரசிகர்களால்  ஆவலுடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் “சூப்பர் சிங்கர் 4”  பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று சென்னையில் பிரம்மாண்டமான விழாவாக ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்த காரணத்தால், அதனை மலேசியாவில் உள்ள ரசிகர்களும் ஆஸ்ட்ரோவின் வாயிலாக நேரடியாகக் கண்டு களிக்க முடிந்தது.  மலேசிய நேரப்படி நேற்று விடியற்காலை 3.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நீடித்தது.

தமிழ் நாட்டின் முக்கிய சங்கீத வித்வான்கள், பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமாகும்.

திவாகர் வென்றார்

இந்த முறை ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற, அவர்களுக்கு இடையிலான போட்டி கடுமையானதாக இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஐவரும் சிறப்பான முறையில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி முன்னேறி வந்தனர்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியும் மிகவும் பரபரப்பாகவும், மிகப் பெரிய வர்த்தக அம்சங்களுடன் இந்த இறுதிச் சுற்றை நோக்கி நிகழ்ச்சிகளை நகர்த்தி வந்தது.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 13 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் செல்பேசிகளின் வழி தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். அதில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளி, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற திவாகர் முதலாவதாக வெற்றி பெற்றார்.

சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடிக்க,1962ஆம் ஆண்டில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட பலே பாண்டியா என்ற வெற்றிப் படத்தில் சிவாஜிக்கும், எம்.ஆர்.இராதாவுக்கும் இடையில் நடைபெறும் போட்டிப் பாடலான நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற டி.எம்.சௌந்தரராஜனின் புகழ் பெற்ற, காலத்தால் அழியாத பாடலை ரசிகர்கள் எந்த காலத்திலும் மறக்க மாட்டார்கள்.

அந்த பாடலை, அதே தோரணையில் இரண்டு குரல்களிலும், மாறி மாறி,  அட்சர சுத்தமாகப் பாடி திவாகர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

இரண்டு வெவ்வேறு பாடகர்கள் பாடியிருந்த அந்தப் மூலப் பாட்டை திவாகர் ஒருவரே குரலை மாற்றி மாற்றி அனாயசமாக, எவ்வித சிரமமும் இன்றி மேடையில் பாடிய விதம் அனைவரையும் அதிசயிக்க வைத்தது.

அவர் பாடி முடித்ததும், நிகழ்ச்சியைக் காண வந்திருந்த அத்தனை கூட்டமும் எழுந்து நின்று ஆரவாரம் செய்ய, போட்டியைக் காண வந்திருந்த பிரபல பாடகி எஸ்.ஜானகி மேடையேறி அவரை ஆசிர்வதித்தார். அப்போதே போட்டியில் அவர்தான் வெல்லப் போகிறார் என்பதும் அனைவருக்கும் புரிந்து விட்டது.

இரண்டாவதாக சைட் சுபஹான் வெற்றி பெற்றார். இவருக்கு இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. நீதிபதிகளின் அதிகமான மதிப்பெண்களை இவர்தான் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக, ஒரு லட்சத்து அறுபதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று,  சரத் சந்தோஷ் வெற்றி பெற்றார். நான்காவது, ஐந்தாவது இடங்களுக்கு பெண் பாடகிகளான பார்வதியும், சோனியாவும் தேர்வு பெற்றனர்.

திவாகரின் வெற்றி ஒரு வரலாற்றுப் பதிவு

இந்தப் போட்டியில் திவாகரின் வெற்றி, தமிழ் நாட்டில் ஒரு வரலாற்றுப் பதிவாக கருதப்படுகின்றது. காரணம், சங்கீத சாதக வகுப்புகளுக்கு செல்லக் கூடிய நல்ல வசதி படைத்தவர்களும், பிரபலமான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களும், சங்கீதப் பரம்பரையைப் பின்னணியாகக் கொண்டவர்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இசையுலகில், மிகச் சாதாரணமான, எளிமையான குடும்பப்  பின்னணியைக் கொண்ட, ஒரு சொந்த வீடு கூட இல்லாத திவாகர் கடுமையான போட்டிகளுக்கிடையில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

அவரது ஏழ்மையான குடும்பப் பின்னணி அனுதாப வாக்குகளாக மாறலாம் என்ற சந்தேகம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு புறம் நெருடிக் கொண்டிருந்தாலும், போட்டிகள் முடிந்தபோது, பாடிய விதத்திலும்  மற்ற போட்டியாளர்களை விட அவர்தான் சிறந்த முறையில் பாடியிருந்தார் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்திருக்க முடியாது.

கடந்த காலங்களில் எளிமையான, எவ்வித சங்கீதப் பின்னணியும் இல்லாத இளையராஜா போன்றவர்கள் தமிழ் நாட்டில் இசை ஜாம்பவான்களாக உருவெடுத்து சரித்திரம் படைத்திருக்கின்றார்கள் என்றாலும், இன்றைய காலகட்டத்தில், நவீன தொழில் நட்ப வடிவங்களான தொலைக்காட்சி  போன்றவற்றின் மூலம் நடத்தப்படும்  இந்த சூப்பர் சிங்கர் போட்டி, திவாகர் என்ற சாதாரண பாடகனை உலகப் புகழ் பெறும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றது.

இந்த வாய்ப்பைக் கொண்டு சினிமாப் பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள் என தனது எதிர்காலத்தை அவர் வெற்றிகரமாக செதுக்கிக் கொள்ள அவருக்கு அபாரமானதொரு வாய்ப்பு இந்த போட்டியில் வென்றதன் மூலம் அவருக்குக் கிடைத்திருக்கின்றது. இனி அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் தொலைக்காட்சி வடிவம்

தமிழ் நாடு மட்டும் இன்றி, மற்ற நாடுகளிலும் கிடைக்கக் கூடிய ஆஸ்ட்ரோ போன்ற துணைக்கோள ஒளிபரப்புகளால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை இந்த சூப்பர் சிங்கம் 4 நிகழ்ச்சி ஈர்த்திருந்தது.

உலகில் பல மூலைகளில் இருக்கும் தமிழ் மக்களை தொலைக்காட்சி போன்றதொரு தொலைத் தொடர்பு தொழில்நுட்பம், இந்த நவீன யுகத்தில் எவ்வாறு இணைக்கின்றது, சங்கீதத் திறன் படைத்த ஒரு தனி மனிதனை,  ஒரு போட்டியின் மூலம், சென்னையின் ஒரு சாலையின் மூலையிலிருந்து, உலகப் புகழின் உச்சிக்கு எவ்வாறு கொண்டு செல்கின்றது என்பதை நமக்கெல்லாம் எடுத்துக் காட்டும் விதமாக இந்த சூப்பர் சிங்கர் போட்டி அமைந்திருந்தது.

கிடைக்கப் போகும் பரிசுகள்

இந்தப் போட்டியில் முதலாவதாக வெற்றி பெற்ற திவாகர் 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி வீடொன்றைப் பரிசாகப் பெறுவார். இரண்டாவது இடத்தைப் பிடித்த சைட் சுபஹான் ஒரு கிலோ தங்கத்தைப் பரிசாகப் பெற்றார்.

மூன்றாவது வெற்றியாளர் சரத் சந்தோஷ் 10 இலட்சம் ரூபாய் பரிசு பெற, நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பிடித்த பார்வதியும் சோனியாவும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் பரிசாகப் பெற்றனர்.

பலதரப்பட்ட போட்டியாளர்கள்

இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு பின்னணியைக் கொண்டவர்களாக இருந்ததும் இந்த முறை வித்தியாசமாக இருந்ததோடு ரசிகர்களையும் கவர்ந்தது.

திவாகர் சென்னையின் எளிமையான வாழ்க்கைச் சூழலில் இருந்து வந்த, தமிழ்க் கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க,  இரண்டாவதாக வெற்றி பெற்ற சைட் சுபஹான் இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்டவராக இருந்தார்.

மூன்றாவதாக வெற்றி பெற்ற சரத் சந்தோஷ் தெலுங்கு பின்னணியோடு ஆந்திராவின் ஹைதராபாத் நகரிலிருந்து சென்னை வந்து போட்டியில் கலந்து கொண்டவராவார்.

நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பிடித்த போட்டியாளர்கள் சோனியாவும், பார்வதியும் மலையாளக் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள்.

இதன் மூலம் தமிழ் நாட்டின் பல் வேறு பிரிவு மக்களை சங்கீதம் என்ற ஒரு பொது மொழியின் மூலம் எவ்வாறு ஒன்றிணைக்க முடியும் என்பதைக் காட்டும் அரங்கமாகவும் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 4 திகழ்ந்தது.

-இரா.முத்தரசன்