Home நாடு ம.இ.கா வில் மறுதேர்தல் நடக்குமா? இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் முடிவு தெரியும்!

ம.இ.கா வில் மறுதேர்தல் நடக்குமா? இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் முடிவு தெரியும்!

710
0
SHARE
Ad

MIC logoகோலாலம்பூர், பிப் 6 – 2014 ஆம் ஆண்டு தொடங்கி ம.இ.காவின் முதல் மத்திய செயலவைக் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் ம.இ.கா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலாக்காவில் நடைபெற்ற கட்சித் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் மத்திய செயலவைக் கூட்டம் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்றைய கூட்டத்தில் கட்சியில் இருக்கும் பல முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

குறிப்பாக தேர்தல் குளறுபடிகள் குறித்து இன்றைய கூட்டத்தில் கடும் விவாதம் நடைபெறலாம் என்றும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு விவாதிக்கப்பட்டால், மறுதேர்தல் நடத்தப்படுமா? என்ற பலரின் கேள்விகளுக்கு இன்று பதில் கிடைக்கும்.

தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 மத்திய செயலவை உறுப்பினர்கள், 3 உதவித்தலைவர்கள் என சுமார் 40 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ம.இ.கா இளைஞர் மற்றும் மகளிர் பிரிவில் நியமனம் செய்யப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் குறித்து எழுந்த பல்வேறு புகார்கள் குறித்து இதுவரை வாய் திறக்காத தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல், இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் அது குறித்து பேசுவாரா? அல்லது கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பாரா? என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒருவேளை பழனிவேல் இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்கவில்லை என்றால், யார் இந்த கூட்டத்தை நடத்துவார்கள் என்பதும் அவர்களின் கேள்வியாக உள்ளது.

எது எப்படியோ புகார்கள் தொடர்பாக (பழனிவேல் மீது கொடுக்கப்பட்டிருக்கும் புகார்கள் உட்பட) இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டால், கடும் விவாதங்கள் ஏற்படலாம் அல்லது தலைவரை எதிர்த்து மத்திய செயலவை உறுப்பினர்கள் யாரும் கேள்வி கேட்காமல் இருந்தால், வழக்கம் போல் இன்றைய கூட்டம் சமுதாயப் பிரச்சனைகளோடு அமைதியாகவே முடியும் என்று கூறப்படுகின்றது.