கோலாலம்பூர், பிப் 6- சமூக வலைத்தளங்களில் வல்லரசாக திகழும் பேஸ்புக், மில்லியன் கணக்கான மக்களை தனக்கு அடிமையாகி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் 2004ம் ஆண்டு பிப்ரவரி 4ம் திகதி பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.
சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த தொடங்கப்பட்ட இந்த இணையதளம் தற்போது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளனர். அந்த வகையில் , பேஸ்புக் பற்றி அறியாதவர்கள் என யாரும் இருக்கவே முடியாது.
சமீபத்தில் பிரின்ஸ்டன் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் பேஸ்புக் ஒரு சமூகநோய் என தெரிவித்துள்ளது. பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து, கோடிக்கணக்கில் லாபத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பேஸ்புக் குறித்து பிரின்ஸ்டன் பல்கலைகழகம் ஆய்வு நடத்தியது.
இதில் பேஸ்புக் ஒரு சமூகநோய் என்றும், 2017ம் ஆண்டுக்குள் 80 சதவிகித வாடிக்கையாளர்கள் இதனை விட்டு விலகிவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் எப்படி ஒரு நோய் வேகமாகப் பரவிப் பின் தொய்வடைகிறதோ, அதே போல பேஸ்புக்கின் நிலையும் இருக்கும் என்று பல எடுத்துக் காட்டுகளுடன் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
டிசம்பர் 2012ல் தான் பேஸ்புக் இணையதளம் மிக அதிகமான அளவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றது, தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது.
இந்த வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளே இருக்கும் என்றும் 2017ம் ஆண்டு காலத்தில் பெரும்பாலான நபர்கள் இதனை விட்டு விலகி விடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.