கோலாலம்பூர், பிப் 10 – காஜாங் இடைத்தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக முன்கூட்டியே பிரச்சாரங்களை ஆரம்பித்து, சட்டத்தை மீறிவிட்டதாகக் கூறப்படும் எந்த ஒரு அடிப்படை, ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளுக்கும் தான் பதிலளிக்கப் போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்துள்ளார்.
காஜாங் இடைத்தேர்தல் வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுத் தாக்கல் மார்ச் 11 ஆம் தேதி நடைபெறும் என்றும் கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் பிகேஆர் விளம்பரப் பிரிவின் தலைவர் மற்றும் தற்போது பெர்காசா இயக்கத்தின் உறுப்பினராக இருந்து வரும் ருஸ்லாம் காசிம் கூறுகையில், கடந்த வாரம் தொடங்கி அன்வார் காஜாங்கில் தொடர்ந்து பிரச்சாரங்களை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்துத் தெரிவித்த அன்வார், தனக்கு எதிராக ஏற்கனவே தேசிய முன்னணி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களின் மூலம் பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டார்கள் என்று கூறினார்.
“டிவி 3 ல் அவரை கேட்க சொல்லுங்கள்? கடுமையான பிரச்சாரங்களை அவர்கள் ஆரம்பித்துள்ளார்களா இல்லையா என்று…”
“ஒவ்வொரு நாளும், பல கதாநாயகர்கள் என்னை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்” என்று இன்று டாமன்சாராவில் உள்ள ஒன் வேர்ல்ட் தங்கும் விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அன்வார் குறிப்பிட்டார்.
“தேர்தல் ஆணையம் அம்னோவின் பேச்சாளர்களா? அல்லது அவர்களுக்காக பேசுபவர்களா?. அவர்கள் ஆர்டிஎம், டிவி3 ஆகியவற்றை பார்க்க மாட்டார்களா? அல்லது உத்துசானை படிக்க மாட்டார்களா?” என்றும் அன்வார் கேள்வி எழுப்பினார்.